மேயர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் நடத்துவதற்கு திமுக, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று சென்னைத் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. அதில்,மேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்துவதற்கு அவசரச் சட்டம் கொண்டுவர அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
எனினும் மேயர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடத்தப்படுவது தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என துணை முதல்வர் பன்னீர்செல்வம் மறுத்தார்.
இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை இன்று (நவம்பர் 20) வெளியிட்டுள்ள திமுக தலைவர் ஸ்டாலின், “அமைச்சரவைக் கூட்டத்தில், மேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் என்று முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளிவந்திருக்கிறது. ஆனால், ஒரு வாரத்திற்கு முன்பு முதல்வர் பத்திரிகையாளர் சந்திப்பில், நேரடியாக மக்களால் மேயர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்” என்று அறிவித்திருந்தார். நேற்றைய அமைச்சரவைக் கூட்டம் தொடர்பான செய்திகள் அதற்கு முரணாக இருக்கின்றன.
நேற்றைய தினம் அப்படியொரு முடிவு எடுக்கப்பட்டிருந்தால் – அது பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் அடிப்படை நோக்கத்தைத் தகர்க்கும் ஜனநாயக விரோத முடிவாகும். ஆகவே அமைச்சரவைக் கூட்டத்தில் மறைமுகத் தேர்தல் குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என்பதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக அறிவித்திட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கையில், “சமீபத்தில் நடைபெற்ற இடைத் தேர்தலில் மக்களின் வாக்குகளை விலை கொடுத்து வாங்கி வெற்றி பெற்ற அ.தி.மு.க.வினர் தற்போது உள்ளாட்சி அமைப்புகளில் மறைமுக தேர்தல் மூலமாக கவுன்சிலர்களை விலைக்கு வாங்கி, பதவிகளை கைப்பற்றி விடலாம் என்கிற முயற்சியை முறியடிக்க வேண்டிய பொறுப்பு மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு இருக்கிறது. அ.தி.மு.க.வின் இத்தகைய ஜனநாயக விரோத நடவடிக்கையை காங்கிரஸ் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. எல்லாவற்றையும் மீறி அவசரச் சட்டம் கொண்டு வரப்படுமேயானால் கடுமையான எதிர்ப்புகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும்” என எச்சரித்துள்ளார்.
மேலும், “உச்சநீதிமன்றத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதியின்படி நேரடித் தேர்தல் நடத்தாமல் மறைமுக தேர்தல் நடத்துவதற்கு அவசரச் சட்டம் கொண்டு வருவது கடுமையான கண்டனத்திற்குரியது. கொடுத்த வாக்குறுதியை மீறுவது உச்சநீதிமன்றத்தை அவமதிக்கிற செயலாகும்” என்றும் விமர்சித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில், “மேயர் உள்ளிட்ட பகுதிகளுக்கு எக்காரணத்தை முன்னிட்டும் மறைமுகத் தேர்தல் நடத்தக் கூடாது. அப்படி நடத்தப்பட்டால் அது ஒரு அப்பட்டமான ஜனநாயக விரோத செயல். இதனால் ஆள் தூக்குவது, பணம் மற்றும் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துதல் போன்ற செயல்கள் நடைபெறும். அமைச்சரவை அப்படி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியிருந்தால் அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கக் கூடாது” என வலியுறுத்தியுள்ளார்.
**பாஜக எதிர்ப்பு**
தற்போது இருக்கக்கூடிய சூழலில் உள்ளாட்சித் தேர்தலில் மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு நேரடி தேர்தல் நடைபெற்றால் அது நமக்கு பின்னடைவை ஏற்படுத்தலாம். மறைமுகத் தேர்தலாக நடைபெற்றால் அதில் எப்படியாவது நாம் வெற்றிபெற்றுவிடலாம் என பாஜக தரப்பிலிருந்து அதிமுகவுக்கு வலியுறுத்தப்பட்டதாகவும் அதன் காரணமாகவே மறைமுகத் தேர்தல் என்ற நிலைப்பாடு எடுக்கப்பட்டிருப்பதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் பறிமாறப்பட்டு வந்தன.
இந்த நிலையில் நியூஸ் 18 ஊடகத்திற்கு பேட்டியளித்த பாஜகவின் மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், “மேயர் உள்ளிட்ட பதவிகளை கூட்டணிக் கட்சியினர் கேட்டுவிடுவார்கள் என்பதால் அதனை தவிர்க்கவே மறைமுத் தேர்தல் என்ற முறையை அறிமுகப்படுத்தி ஆளும் அரசு ஜனநாயக சீர்கேட்டை நடத்தியுள்ளது. ஆளுங்கட்சி இதில் அரசியல் செய்கிறது. தெம்பிருந்தால் மேயர் பதவிக்கு நேரடி தேர்தலை நடத்தப்பட்டும்” என்று அதிமுக அரசை சாடியுள்ளார்.
அதிமுக கூட்டணியில் பாஜக அங்கம் வகிக்கும் நிலையில், பாஜக தரப்பிலிருந்தே இப்படி ஒரு போர்க்கொடி உயர்த்தப்பட்டுள்ளது அதிமுகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
**அரசாணை வெளியீடு**
எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்த நிலையிலும், மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்த அவசர சட்டம் பிறப்பித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், “உள்ளாட்சித் தேர்தலில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட கவுன்சிலர்கள் மேயர்களை தேர்வு செய்ய மறைமுக தேர்தல் நடத்தப்படும். அதுபோலவே நகரமன்ற தலைவர்களையும், பேரூராட்சித் தலைவர்களையும் மக்களால் தேர்வு செய்யப்பட்ட கவுன்சிலர்கள் தேர்வு செய்வர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
�,”