இனி ரேஷன் கடைகளில் சிறுதானியங்கள்!

ரேஷன் கடைகளில் சிறுதானியங்களை விற்பனை செய்ய உத்தரவிட்டு தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

ஒருகாலத்தில் பண்டிகைக்கு மட்டுமே நெல் அரிசியை சாப்பிட்ட காலம் உண்டு என்று சொன்னால், அதை யாரும் நம்பமாட்டார்கள், அந்தளவுக்கு இன்று அதனுடைய பயன்பாடு அதிகரித்துவிட்டது. காலங்காலமாக நம் முன்னோர்கள் உண்டு வளர்ந்தது நெல் சோறு அல்ல, சிறு தானியங்களே. சிறுதானியங்கள் என்று சொன்னாலும், அது பெயரில்தான் சிறுதானியம். அதை நிலத்தில் போட்டாலும், வயிற்றில் போட்டாலும் தரும் பலன் அதிகம். நவீனகாலம் என்ற பெயரில் நாம் வாழ்க்கை முறை மாறியபிறகு, சிறுதானியங்கள் பயன்பாட்டை பார்ப்பதே அரிதாகிவிட்டது.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், இனிவரும் காலங்களில் ரேஷன் கடைகளில் சிறுதானியங்கள் விற்பனை செய்யப்பட உள்ளன. அதன்படி, கம்பு, ராகி, திணை, குதிரைவாலி மற்றும் சாமை, வரகு உள்ளிட்ட சிறுதானியங்கள் ரேஷன் கடைகளிலேயே கிடைக்கும்.

கூட்டுறவு சங்கங்கள் மூலம் சிறுதானியங்கள் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படவுள்ளன. சிறுதானியங்களின் விலையை நிர்ணயம் செய்ய, கூட்டுறவு சங்க பதிவாளர் தலைமையில் தமிழ்நாடு அரசு குழு ஒன்றை அமைத்துள்ளது. இந்தக் குழு சிறுதானியங்களுக்கான விலையை நிர்ணயம் செய்து விரைவில் அறிவிக்கவுள்ளது.

முதற்கட்டமாக சோதனை அடிப்படையில் சென்னை மற்றும் கோவை மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கவும், சிறுதானியங்களின் பயன்பாட்டை அதிகரிக்கவும் தமிழ்நாடு அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்ததும் தாக்கல் செய்யப்பட்ட முதல் வேளாண் பட்ஜெட்டில் வேளாண் துறை அமைச்சர் ஆர்.கே.பன்னீர் செல்வம், ரேஷன் கடைகளில் சிறுதானியம் விற்பனை செய்யப்படும் என்று அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

**-வினிதா**

�,”

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts