சென்ற தலைமுறையில் நம் உணவு முறையிலும், உணவுப் பொருட்களிலும் ஏற்பட்ட மாற்றம், நமது ஆரோக்கியத்தையும் ஆயுளையும் சுருக்கிவிட்டது. எதிர்காலத் தலைமுறையினருக்காகவாவது இயற்கை விவசாயத்தையும் நம் பாரம்பர்ய உணவுமுறையையும் மீட்டெடுக்கவேண்டிய தருணம் இது. புரதம், நார்ச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் பி, பாஸ்பரஸ், மாவுச்சத்து, சுண்ணாம்புச்சத்து போன்ற பல ஊட்டச்சத்துகளைக் கொண்ட இந்த தினை கீரை சாதம், இதயத்தைப் பலப்படுத்தும்; நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
**என்ன தேவை?**
தினை – 200 கிராம்
நறுக்கிய சிறு கீரை – ஒரு கப்
காய்ந்த மிளகாய் – ஒன்று
பூண்டு – 4 பல்
சீரகம் – அரை டீஸ்பூன்
சின்ன வெங்காயம் – 10 (நறுக்கவும்)
மஞ்சள்தூள் – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
எண்ணெய் – 4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
**எப்படிச் செய்வது?**
தினையை பத்து நிமிடங்கள் ஊறவைத்துக் களைந்துகொள்ளவும். கீரையை அலசி வைக்கவும். பிறகு ஒரு குக்கரை அடுப்பில் ஏற்றி எண்ணெய்விட்டு சீரகம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் தாளிக்கவும். இதனுடன் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்னர் கீரை, மஞ்சள்தூள், பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் ஒரு பங்கு தினைக்கு இரண்டரை பங்கு என்கிற கணக்கில் தண்ணீரைச் சேர்க்கவும். இதில் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். கலவை கொதித்ததும் தினையைச் சேர்த்து மூன்று விசில் வரும்வரை வேகவிட்டு இறக்கவும். கமகம தினை கீரை சாதம் தயார்.
**[நேற்றைய ரெசிப்பி: வரகு தயிர் சாதம்](https://minnambalam.com/public/2022/01/06/1/proso-curd-rice)**
.�,