சில படங்களையும், அவற்றில் இடம்பெற்ற ஜோடிகளையும் நம்மால் மறக்கவே முடியாது. அதிலும், மணிரத்னம் உருவாக்கிய ஜோடிகள் அனைத்துமே, எப்போதும் கொஞ்சம் ஸ்பெஷலானவை. அவற்றில் மிகக் குறிப்பிடக்கூடியது ரோஜா திரைப்படத்தில் இடம்பெற்ற அரவிந்த் சாமி-மது ஜோடி. இப்போது இவர்கள் இருவரும் எம்.ஜி.ஆர். மற்றும் அவரது மனைவி ஜானகி ஆகியோரின் கேரக்டரில் நடிக்கின்றனர்.
ரோஜா படத்தில் அதிக நேரம் ஒன்றாக நடிக்கவில்லை என்றாலும், அவர்களிருவரும் ரசிகர்களிடம் கடத்திய காதல் அழகானது. அந்தப்படம் ரிலீஸாகி கிட்டத்தட்ட 28 வருடங்கள் கழித்து மீண்டும் இவர்கள் இருவரும் ஒன்றிணைகின்றனர். இயக்குநர் விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடித்து வரும் தலைவி திரைப்படத்தின் ஷூட்டிங் படு வேகமாக நடைபெற்றுவருகிறது. இந்தப் படத்தின் டீசர் வெளியாகி தமிழகத்தையே அசைத்துப்பார்த்தது என்று தான் சொல்லவேண்டும். தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறந்தவரும், தமிழக அரசியலில் கொடியை நாட்டியவருமான முன்னாள் தமிழக முதல்வர், மறைந்த ஜெ.ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கைக் கதையில் கங்கனா நடிக்கிறார் என்றால் சாதாரணமா. அதிலும், எம்ஜிஆரின் கேரக்டரில் அரவிந்த் சாமி நடிக்கும் தோற்றமும் வெளியிடப்பட்டதிலிருந்து ஒரு பக்கம் படத்துக்கு ஆதரவும், இன்னொரு பக்கம் எதிர்ப்புமாக அனல் பறந்தது. இந்நிலையில் தான், எம்ஜிஆரின் மனைவியான ஜானகி அவர்களின் கேரக்டரில் மது நடிக்கும் தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்தத் திரைப்படம் முழுக்க முழுக்க ஜெயலலிதாவைப் பற்றியது என்று படக்குழுவினர் பல நாட்களாகக் கூறிவந்தனர். எம்.ஜி.ஆர். இல்லாமல் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கையைக் கூற முடியாது என்பதால், அரவிந்த் சாமி எம்.ஜி.ஆராக நடிப்பது சிலரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால், இப்போது எம்.ஜி.ஆர் மனைவியான ஜானகியின் கேரக்டரையும் படத்தில் கொண்டுவந்திருப்பது பல தரப்பினரிடையே ஒருவித சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஜெயலலிதா-எம்.ஜி.ஆர்-ஜானகி ஆகிய மூவரின் வாழ்வும் திரையுலகிலும், அதிமுக என்ற கட்சியினாலும் பின்னிப் பிணைந்த ஒன்று. இதில் எவரையும் நீக்கியோ, மறைத்தோ மற்றவரைப் பற்றி சொல்லிவிட முடியாது என்றாலும், என்ன சொல்லப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்கனவே விண்ணைப் பிளக்கத் தொடங்கிவிட்டது.
-முத்து-�,