gதேவேந்திர பட்னவிஸூக்கு போலீஸ் சம்மன்!

Published On:

| By Balaji

மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், தேர்தல் பிரமாண பத்திரத்தில் குற்ற வழக்குகள் குறித்த விபரங்களை இணைக்காத விவகாரம் தொடர்பான வழக்கில் நாக்பூர் போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது.

மகாராஷ்டிராவில் நீண்ட அரசியல் குழப்பத்திற்குப் பிறகு நேற்று (நவம்பர் 28) மாலை சிவசேனா தலைமையிலான அரசு பதவியேற்றது. முன்னாள் முதல்வரான பட்னவிஸ் தற்போது நாக்பூர் எம்எல்ஏ-வாக உள்ளார்.

தேவேந்திர பட்னவிஸ் கடந்த 2014ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது நாக்பூர் தென்மேற்கு தொகுதியில் போட்டியிட்டு வென்றார். தேர்தலில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தபோது அதில் நிலுவையில் இருந்த 2 கிரிமினல் வழக்குகள் குறித்து எந்தவிதமான குறிப்பும் தெரிவிக்காததையடுத்து, அவருக்கு இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த 1996 மற்றும் 1998ஆம் ஆண்டு, பட்னவிஸ்க்கு எதிராக மோசடி மற்றும் ஏமாற்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவர் தாக்கல் செய்த வேட்புமனு பிரமாண பத்திரத்தில், இவ்விரண்டு கிரிமினல் வழக்குகளையும் மறைத்ததாக நாக்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் சதீஸ் உகே மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். ஆனால், இந்த வழக்கை கீழ் நீதிமன்றம் மற்றும் மகாராஷ்டிரா உயர்நீதிமன்றம் அடுத்தடுத்து தள்ளுபடி செய்தன. இதையடுத்து, வழக்கறிஞர் சதீஸ், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் தேவேந்திர பட்னவிஸ் இந்த வழக்கை கீழ் நீதிமன்றத்தில் எதிர்கொள்ளவேண்டும் என தீர்ப்பளித்தது.

இதையடுத்து, மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி எஸ்.டி.மேத்தா கடந்த 4ஆம்தேதி பட்னவிஸ்க்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தார். அதில், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி தேர்தல் பிரமாணப்பத்திரத்தில் குற்ற விவரங்களை மறைத்தது தண்டனைக்குரிய குற்றம். அதற்கு விளக்கம் தாருங்கள்” என்று நோட்டீஸ் அனுப்பியது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக நாக்பூர் போலீஸார் விசாரணை நடத்தவும் உத்தரவிட்டது.

இந்நிலையில், நாக்பூர் போலீசார் நேற்று, பட்னவிஸின் வீட்டிற்கே சென்று சம்மனை அளித்துள்ளனர். முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த 2 நாட்களிலேயே போலீஸார் தேவேந்திர பட்னவிஸுக்கு சம்மன் அனுப்பியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share