மேட்டூர் அணையின் நீர்மட்டம் 67வது முறையாக 100 அடியை எட்டியுள்ளது என்று பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.
தொடர்ந்து பெய்து வரும் மழையால், மேட்டூர் அணைக்கு வரும் நீர் வரத்து கணிசமாக அதிகரித்து, அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
கடந்த இரண்டு நாட்களாக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழையளவு குறைந்ததால், அணைக்கான நீர்வரத்து 39 ஆயிரத்து 634 கன அடியிலிருந்து 28 ஆயிரத்து 650 கன அடியாக குறைந்துள்ளது.
மேலும், பாசனத்திற்காக அணையில் இருந்து 650 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இருப்பினும், அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவை விட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நேற்று முன் தினம் 95.10 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 99.68 அடியாக உயர்ந்துள்ளது. தற்போது 100 அடியை எட்டியுள்ளது.
இந்நிலையில், 120 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளதாக தமிழ்நாடு பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது. மேட்டூர் அணையின் 88 ஆண்டு கால வரலாற்றில் 67ஆவது முறையாக நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளது. கடந்தாண்டு 4 முறை 100 அடியை எட்டிய நிலையில் இந்தாண்டு முதல்முறையாக 100 அடியை எட்டியுள்ளது. நீர்மட்டம் 100 அடியை எட்டியதை அடுத்து மேட்டூர் அணையில் 16 கண் மதகு அருகே காவிரி அன்னைக்கு நன்றி தெரிவித்து வழிபாடு நடத்தப்பட்டது.
**-வினிதா**
�,