மேட்டூர் அணை திறப்பு தொடர்பாக முதல்வர் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
தமிழகம் முழுவதும் மார்ச் 24ஆம் தேதியிலிருந்து ஊரடங்கு அமலில் இருந்தாலும் விவசாயம் மற்றும் அதுசார்ந்த பணிகளுக்குத் தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. இதனால் விவசாயப் பணிகள் எந்தவித தடையும் இல்லாமல் நடந்து வருகின்றன. காவிரி டெல்டா பகுதியில் குறுவை சாகுபடிக்காக வழக்கமாக ஜூன் 12ஆம் தேதி நீர் திறந்துவிடுவது வழக்கம். பருவமழை பொய்த்ததாலும், வறட்சி காரணமாக கடந்த சில ஆண்டுகளாக தாமதமாகவே தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
தற்போது காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துக் காணப்பட்டது. சில நாட்களுக்கு முன்பு மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவு ஆன 120 அடியை எட்டியது. இதனால் கடந்த 10 ஆண்டுகளில் முதன்முறையாக முன்கூட்டியே அணை திறக்கப்படுவது உறுதியானது.
காவிரி டெல்டா விவசாயிகளும் பாசனத்துக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். 2011ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் தேதியே மேட்டூர் அணையை திறந்துவிட்ட ஜெயலலிதாவின் முடிவை மேற்கோள் காட்டிய காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன், “டெல்டாவில் உள்ள விவசாயிகள் ஒன்பது ஆண்டுகளாக குறுவை சாகுபடியை இழந்துள்ளனர். இப்போது, மேட்டூர் அணைக்கு நல்ல நீர்வரத்து இருப்பதால் சாகுபடியை மேற்கொள்ள ஆர்வமாக உள்ளனர். அரசாங்கம் அவர்களுக்கு உதவ வேண்டும்” என்று தி இந்து ஆங்கில இதழுக்கு பேட்டியளித்தார்.
இதுபோலவே, இதேபோன்ற காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் பொதுச் செயலாளர் காவிரி எஸ்.தனபாலன், மேட்டூர் அணை 10 நாட்களுக்கு முன்பே திறக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
இந்த நிலையில் மேட்டூர் அணையிலிருந்து இந்த ஆண்டுக்கான நீர் திறப்பு குறித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (மே 18) ஆலோசனை நடத்துகிறார். இதில் வேளாண் துறை அமைச்சர் துரைகண்ணு மற்றும் டெல்டா மாவட்ட அமைச்சர்கள், பொதுப்பணித் துறை அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். அதில் எடுக்கப்படும் முடிவின்படி மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பது எப்போது என்ற தகவல் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
**எழில்**
�,