அண்ணா அறிவாலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
சென்னை காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று செல்போனில் பேசிய மர்ம நபர், தேனாம்பேட்டையிலுள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், சிறிது நேரத்தில் வெடிக்கும் எனவும் கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்தார். இதுகுறித்து தகவல் உடனடியாக மேலதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, உடனே அண்ணா அறிவாலயத்திற்கு விரைந்த வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், மோப்பநாய் உதவியுடன் ஒவ்வொரு இடமாக தீவிர சோதனை மேற்கொண்டனர். ஆனால், வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இதனிடையே வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்த தேடுதலை காவல் துறையினர் முடுக்கிவிட்டனர். காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு வந்த எண்ணை ஆய்வு செய்ததில், மிரட்டல் விடுத்தவர் சென்னை தி.நகர் எஸ்.பி.நகரைச் சேர்ந்த கணேசன் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த அவரை கைது செய்த தேனாம்பேட்டை காவல் துறையினர், காவல் நிலையம் அழைத்துவந்து தீவிரமாக விசாரணை நடத்தினர். மதுபோதையில் இருந்ததால் அவ்வாறு போன் செய்துவிட்டதாக வாக்குமூலம் அளித்திருக்கிறார்.
தொடர்ந்து கணேசனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், “நான் அன்றாடம் கிடைக்கும் வேலைகளை செய்தும், குப்பை பொறுக்கியும் வாழ்ந்து வருகிறேன். அனைத்துப் பிரச்சினைகளுக்கும் எனது மனைவிதான் காரணம். எனக்கு அவர் சூனியம் வைத்துவிட்டதால் நான் மதுவுக்கு அடிமையாகிவிட்டேன். அவர் மீது இருந்த வெறுப்பில்தான் மது போதை தலைக்கேறிய நிலையில் 100க்கு போன் செய்து அறிவாலயத்தில் வெடிகுண்டு வைத்துவிட்டதாக கூறினேன். ஆனால், நான் இதுவரை வெடிகுண்டை கண்ணால் கூட பார்த்ததில்லை. என்னை விட்டுவிடுங்கள், தெரியாமல் செய்துவிட்டேன்” என்று காவல் துறையினரிடம் கெஞ்சியுள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருகிறது.
�,