|ஆண்-பெண் உறவு ஏன் இவ்வளவு சிக்கலாக இருக்கிறது?

Published On:

| By Balaji

சத்குரு ஜகி வாசுதேவ்

உறவுகள் நம் வாழ்க்கைக்குள் மிகுந்த இனிப்பைக் கொண்டுவரக்கூடியதாக இருந்தாலும், அவை நமக்குள் மிகுந்த கசப்பையும் ஏற்படுத்தவல்லவை. சிலசமயம் ஆண்-பெண் உறவு கசப்பாவது எதனால் என்று ஹிந்தி நடிகை மௌனி ராய் சத்குருவிடம் கேட்கிறார்.

**மௌனி ராய்:**

**

உறவு, அதிலும் குறிப்பாக ஆண்-பெண் அல்லது கணவன்-மனைவி உறவு, ஏன் இவ்வளவு சிக்கலானதாக இருக்கிறது.

**

**சத்குரு:**

நமஸ்காரம் மௌனி. அனைவருக்கும் உறவுகள் தரும் இனிப்பு பற்றி தெரியும், ஆனால் அதில் நிறைய கசப்பும் இருக்கிறது – அதை நீங்கள் ருசிக்கத் துவங்கியுள்ளீர்கள். துரதிர்ஷ்டவசமாக, இன்று நாம் மேற்கத்திய நாடுகளிலிருந்து இந்தப் பார்வையை எடுத்துக்கொண்டோம் – அதாவது ‘உறவு’ என்றாலே உடலை அடிப்படையாகக் கொண்ட உறவைத்தான் மக்கள் நினைக்கிறார்கள், ஆனால் உறவுகள் பலவிதமாக இருக்கமுடியும்.

உடலை அடிப்படையாகக் கொண்ட உறவுகளாக இருந்தால், ஒருவரின் உடல்பற்றி மற்றவருக்கு இருக்கும் உற்சாகம், சிறிது காலத்திற்குப் பிறகு குறைந்து மறைந்துவிடும். எதை உச்சகட்டம் என்று நீங்கள் நினைத்தீர்களோ, அது சிறிது காலத்திற்குப் பிறகு உச்சமாக இருப்பதில்லை.

அவர்களை பிரதானமாக ஈர்த்த விஷயம் கரைந்து காணாமல் போகத் துவங்கும்போது, மனிதர்கள் அதைத் தாண்டி வளர்வது இயற்கையானது. அப்போது ஏனென்று தெரியாமல் ஒருவருக்கொருவர் கசப்பாக நடந்துகொள்வார்கள், ஏனென்றால் அடிப்படையில் இப்படியொரு உறவு, இன்னொருவரிடமிருந்து இனிப்பைப் பிழிந்தெடுக்கப் பார்க்கிறது. யாரோ ஒருவரிடமிருந்து நீங்கள் இனிப்பைப் பிழிந்தெடுக்கப் பார்த்தால், சிறிது காலத்திற்குப் பிறகு, ஆரம்பத்தில் கிடைத்த அதே பலன் கிடைக்காமல் போகும்போது, சற்று கசப்பாகத் துவங்குகிறது.

உங்களுக்கு வயதாக ஆக, சில விஷயங்கள் நிகழக்கூடும். நேற்றுடன் ஒப்பிட்டால், இன்று நீங்கள் வயதில் சற்றே மூப்படைந்துள்ளீர்கள். அதனால் நீங்கள் இன்று இளமையாக இருக்கும்போது, உங்கள் வாழ்க்கையில் இருக்கும் அனைத்து உறவுகளையும், சந்தோஷத்தின் வெளிப்பாடாக பார்க்கவேண்டும், சந்தோஷத்தைப் பிழிந்தெடுப்பதாக பார்க்கக்கூடாது. இது உடலை அடிப்படையாகக் கொண்ட உறவுகளுக்கு மட்டுமல்ல, எல்லா உறவுகளுக்கும் பொருந்தும்.

இது நடக்கவேண்டும் என்றால், முதலில் உங்கள் இயல்பினாலேயே நீங்கள் ஆனந்தமாக மாறவேண்டும். ஆனந்தத்தின் பிரவாகமாக ஊற்றெடுப்பது எப்படி என்பதில் நீங்கள் கவனம் செலுத்தினால், அந்த ஆனந்தத்தைப் பகிரும்விதமாக உங்கள் உறவுகள் அமைந்தால், சாதாரணமாக மனிதர்கள் அவர்களின் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சர்க்கஸ் பற்றி நீங்கள் கவலைப்படத் தேவையில்லை.

**உறவுகளைக் கையாள்வது**

ஒரு உறவு என்பது வாழ்க்கையின் ஒரு அம்சத்தை மட்டுமே சார்ந்திருப்பதில்லை. இரண்டுபேர் ஒன்றாக இருந்தால், அவர்கள் பல விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள நேர்கிறது. இயற்கையாகவே ஒருவர் கால்விரல் மேல் இன்னொருவர் மிதிப்பது போன்ற சூழ்நிலைகளால், பல சின்னச்சின்ன விஷயங்கள் நிகழத் துவங்கும். அதனால் பல பேச்சுக்கள், அல்லது வாக்குவாதங்கள் கூட ஏற்படலாம், வாக்குவாதங்கள் நிச்சயம் ஏற்படும்.

இவை அனைத்தையும் உங்களால் தினமும் நிர்வகித்துக்கொண்டு இருக்கமுடியாது. அதனால் சிறந்த உபாயம், உங்களை நீங்கள் உற்சாகமாக, ஆனந்தமாக இருக்கும்விதமாக வைத்துக்கொள்வதே. அது நிகழ்ந்தால், உங்கள் உறவுகள் தேவைகளை அடிப்படையாகக் கொண்டதாக இருக்காது.

உறவுகள் தேவைகளை அடிப்படையாகக் கொண்டிருந்தால், உங்களுக்குத் தேவைப்படுவது கிடைக்காவிட்டால், நீங்கள் குறைப்பட்டுக் கொள்வீர்கள். உங்களுக்குக் கிடைக்க வேண்டியது கிடைக்காமல் இருப்பதால் குறைசொல்வீர்கள், கசப்பாக உணர்வீர்கள். இப்படிப்பட்ட தேவையை மட்டும் உங்களுக்குள்ளிருந்து நீக்கிவிட்டால், நீங்கள் இயற்கையாகவே ஆனந்தத்தின் பிரவாகமாக இருந்தால், நீங்கள் எல்லாவித மக்களுடனும் அற்புதமான உறவுகள் வைத்திருக்கலாம், அவர்கள் யாராக இருந்தாலும் சரி. அவர்கள் உங்களைப் போல இருக்கவேண்டிய அவசியமில்லை. உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு மிக அழகான உறவுகள் அமையட்டும்.

**

மீண்டும் சனிக்கிழமை சந்திப்போம்….

**

[அன்பு, நேர்மை போன்றவற்றை பின்பற்ற முடியவில்லையே?](https://minnambalam.com/k/2019/10/12/6/Can’t%20follow%20love%20and%20honesty-sadhguru-explain)

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share