வாய்ப்பை தவறவிட்ட மாணவர்கள்: மீண்டும் சீட் ஒதுக்க உத்தரவு!

Published On:

| By Balaji

நீட் தேர்வில் வெற்றிபெற்று மருத்துவப் படிப்பில் வாய்ப்பை தவறவிட்ட நான்கு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தலா ஒரு எம்பிபிஎஸ் / பிடிஎஸ் சீட் ஒதுக்கீடு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டில் தனியார் கல்லூரிகளில் இடம் கிடைத்த அரசுப் பள்ளி மாணவர்கள் சிலர் கட்டணம் செலுத்த முடியாமல்  மருத்துவப் படிப்பைக் கைவிட்டனர். இதைத் தொடர்ந்து தனியார் கல்லூரிகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கட்டணத்தை அரசே ஏற்கும் என்று அறிவிப்பு வெளியானது.

அறிவிப்பு வெளியாவதற்கு முன்னதாக மருத்துவ சீட் கிடைத்தும் அந்த வாய்ப்பை தவறவிட்ட மாணவர்கள் மீண்டும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். பரமக்குடியைச் சேர்ந்த கார்த்திகா ஜோதி என்ற மாணவி, மீண்டும் வாய்ப்பு வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.  மாணவர் அருண், மாணவிகள் சௌந்தர்யா, கௌசல்யா ஆகியோரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த மனு நீதிபதி வைத்தியநாதன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தகுதியான மாணவர்களின் மருத்துவக் கனவு வீணாகக் கூடாது என்பதால் தமிழக அரசு சிறப்பான முடிவை எடுத்துள்ளது என்றும் எனினும் மாணவி தனது மருத்துவ வாய்ப்பை மறுத்த அடுத்த நாள் இந்த உத்தரவு வந்துள்ளது என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.

மேலும் நீட் தேர்வில் வெற்றி பெற்ற  அருண், சௌந்தர்யா, கௌசல்யா ஆகிய மாணவர்களுக்கு தலா ஒரு எம்பிபிஎஸ் இடமும் கார்த்திகா ஜோதிக்கு ஒரு பிடிஎஸ் இடமும் ஒதுக்கீடு செய்து காலியாக வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

**-பிரியா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share