Zபரவும் கொரோனா : பயந்துபோன பயணிகள்!

Published On:

| By Balaji

கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதையடுத்து சென்னை விமான நிலையத்தில் பயணிகள் வருகை குறைவால் 16 உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாடு முழுவதும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று ஓரளவு குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு விலக்கப்பட்டு படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதையடுத்து சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் விமான சேவைகள் அதிகரித்து வந்தன.

கடந்த பிப்ரவரி மாதம் 17ஆம் தேதியில் இருந்து சென்னை உள்நாட்டு விமான நிலைய முனையத்தில் எந்தவித கட்டுப்பாட்டுகளின்றி உள்நாட்டு விமான சேவைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டது. பன்னாட்டு விமானங்களுக்கு கட்டுப்பாடு நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து நாள் ஒன்றுக்கு வருகை, புறப்பாடு என 270 விமானங்கள் வரை இயக்கப்பட்டு வந்தன. அதேபோல் பயணிகள் எண்ணிக்கையும் நாளொன்றுக்கு 25,000 முதல் 30,000 வரை அதிகரித்து வந்தது.

சென்னை விமான நிலையம் மீண்டும் சகஜ நிலைக்கு வேகமாக திரும்பிக்கொண்டு இருந்த நிலையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூா் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தாக்கம் மீண்டும் வேகமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால், விமானப் போக்குவரத்து துறை அமைச்சகம் விமான பயணிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.

இந்த நிலையில், கடும் கட்டுப்பாடுகளால் சென்னை விமான நிலையத்தில் அதிகரித்துவந்த பயணிகள் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது. இதையடுத்து போதிய பயணிகள் இல்லாமல் விமான சேவைகளின் எண்ணிக்கையும் மீண்டும் குறைக்கப்பட்டுள்ளன.

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து 109 புறப்பாடு விமானங்களும், 111 வருகை விமானங்களும் மொத்தம் 220 விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டன. நேற்று (மார்ச் 17) சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானங்களில் 8,400 பேரும், வருகை விமானங்களில் 7,200 பேரும் என 15,600 போ் மட்டும் பயணித்தனர்.

மேலும், சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் போதிய பயணிகள் இல்லாததால் ஆமதாபாத், புனே, மும்பை, சீரடி, கொச்சி, பெங்களூரூ, சூரத், டெல்லி செல்ல வேண்டிய எட்டு விமானங்களும் சென்னைக்கு வரவேண்டிய எட்டு விமானங்களும் என 16 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இந்த நிலை மேலும் தொடரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

**-ராஜ்**

.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share