2014ல் பாஜக அரசு ஆட்சிக்கு வந்தது முதல் கருப்புப் பணத்துக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகிறது. 2016 நவம்பரில் பணமதிப்பழிப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. இந்த நடவடிக்கையால் அனைத்து பணமும் வங்கிக்கு வரவில்லை. கருப்புப் பணம் தேங்கியதாகச் சொல்லப்பட்டது. குறிப்பாகக் கருப்பு பணத்தைப் பதுக்கிய பண முதலைகள் அதனைத் தங்கத்தில் முதலீடு செய்ததாகச் சொல்லப்பட்டது.
தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்வதில் இந்தியாவும் முக்கிய இடத்தில் உள்ளது. இதில் கருப்புப் பணத்தின் மூலம் அதிகளவு முதலீடு செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்தியாவில் வரி செலுத்தி சுமார் 20,000 டன் தங்கம் இருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது. ஆனால் கணக்கில் காட்டாமல் இறக்குமதி செய்யப்பட்ட தங்கம், மற்றும் மூதாதையர்கள் ஆண்டாண்டு காலமாகச் சேமித்து வைத்திருந்த தங்கம் இவற்றை எல்லாம் கணக்கில் சேர்த்தால், இந்தியாவில் 25 ஆயிரம் டன் முதல் 30 ஆயிரம் டன் தங்கம் இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது. இதன் மதிப்பு ரூ.71 லட்சம் கோடி முதல் ரூ.106 லட்சம் கோடியாக இருக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தங்கத்தின் மூலம் முதலீடு செய்த கருப்பு பணத்தை மீட்பதற்காக மத்திய அரசு, ‘தங்கம் பொது மன்னிப்பு திட்டம்’ என்ற புதிய திட்டத்தை தீட்டியிருப்பதாக நேற்று முதல் செய்திகள் வெளி வந்துகொண்டிருக்கின்றன. அதன்படி, குறிப்பிட்ட அளவு வரை தங்கத்தை வைத்துக்கொள்ளலாம். ஆனால் அதற்கு மேல் வைத்திருப்பவர்கள் அதற்கான ரசீதுகளைக் காட்டி வரி செலுத்த வேண்டும். ரசீது இல்லாத தங்கத்துக்கும் முறையாகக் கணக்குக் காட்டி வரி செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு திட்டம் வகுத்துள்ளதாகத் தெரியவந்தது. கணக்கில் காட்டப்படாத தங்கத்துக்கு 30 முதல் 33 சதவிகிதம் வரை வரி விதிக்கலாம் என்று சொல்லப்பட்டது. ஆனால் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம் என்ற உச்ச வரம்பு குறித்துத் தெரியவரவில்லை.
இதுகுறித்து சில வல்லுநர்கள் கூறும்போது, ”இது நல்ல விஷயம்தான். இதை நடைமுறை படுத்துவதில் சிக்கல் ஏற்படும். அதாவது பாரம்பரியமாகத் தங்கத்தில் முதலீடு செய்பவர்கள் மற்றும் பரம்பரை பரம்பரையாக வைத்திருக்கும் தங்கத்துக்கு ரசீது காட்ட இயலாது” என்று தெரிவித்தனர்.
அதிகாரப்பூர்வமாக இதுகுறித்து அறிவிக்கப்படாத நிலையில் இன்று நிதியமைச்சகம் ஏ.என்.ஐ ஊடகத்திடம் கூறியதாவது, ’தங்கத்துக்கு வரி போடுவது என எந்த ஒரு திட்டமும் இல்லை. பட்ஜெட் தொடர்பான வேலைகள் தொடங்கியிருக்கும் நிலையில் இதுபோன்ற செய்திகள் வெளியாகியிருக்கலாம்’ என்று தெரிவித்துள்ளது.
�,