எம்பில், பிஎச்டி மாணவிகளுக்கு 240 நாள் மகப்பேறு விடுப்பு: யுஜிசி உத்தரவு

Published On:

| By Balaji

எம்பில், பிஎச்டி போன்ற உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு அவர்களின் படிப்பு காலத்தில் ஒருமுறை 240 நாட்கள் மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என பல்கலைக்கழக மானிய குழு (யுஜிசி) உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பல்கலைக்கழக மானியக் குழுவின் செயலாளர் ரஜினிஷ் ஜெயின், அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “யுஜிசி சட்டம் 2016இன்படி, எம்பில், பிஎச்டி படிப்புகளைப் படித்துவரும் மாணவிகளுக்கு மகப்பேறு விடுப்பு கட்டாயம் வழங்கப்பட வேண்டும். அவர்களின் படிப்புக் காலத்தின்போது 240 நாட்கள் வரை மகப்பேறு அல்லது குழந்தை பராமரிப்பு விடுப்பு வழங்கலாம்.

இதற்காக, அனைத்து உயர்கல்வி நிலையங்களும் தங்களின் நிறுவனங்கள், கட்டுப்பாட்டில் இயங்கும் கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளுக்கு மகப்பேறு விடுப்பை வழங்க உரிய விதிமுறைகளை வகுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட மாணவிகளுக்கு தேர்வு கால சலுகைகள், வருகைப் பதிவேடுகளில் சலுகைகள் வழங்கிட ஏதுவாகவும் உரிய விதிகளை வகுக்க வேண்டும். இது தொடர்பாக இளங்கலை மற்றும் முதுகலை படிப்பைப் படிக்கும் மாணவிகளுக்குத் தேவை கருதி பிற வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும்” என்று அந்தச் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

**-ராஜ்**

.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share