மாஸ்டர் திரைப்படத்தின் இசை வெளியீடு நிகழ்ச்சி மார்ச் 15ஆம் தேதி நடைபெறும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தகவலை அறிவித்த சன் டிவி நிறுவனம், ‘நிகழ்ச்சியை நேரலையில் சன் டிவியில் கண்டுகளிக்கலாம்’ என்றும் குறிப்பிட்டுள்ளது.
மாஸ்டர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை தமிழ் சினிமா முழுவதும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறது. பாடலில் சொல்லப்பட்ட குட்டி ஸ்டோரியைத் தாண்டி, நிகழ்ச்சியில் என்ன சொல்லப் போகிறார் விஜய் என்பது முக்கியமானது. விஜய் ரசிகர்களுக்குப் பிரச்சினை ஏற்பட்டதற்கே, ‘என் ரசிகர்களை கைவெச்சா நான் சும்மா இருக்க மாட்டேன்’ எனப் பேசினார் விஜய். இந்த முறை மாஸ்டர் படப்பிடிப்பில் இருந்த விஜய் மீது நடைபெற்ற ஐடி ரெய்டின் மூலம் விஜய் மீதே கை வைத்துவிட்டார்கள். என்ன நடக்கப்போகிறதோ என்று பலவாறு பில்டப்புகளைக் கொடுத்து வருவதால் இசை வெளியீடு நிகழ்ச்சி மீதான எதிர்பார்ப்பை உயர்த்தி வைத்திருக்கின்றனர். எத்தனை ஆயிரம் செலவானாலும் இந்த நிகழ்ச்சியில் விஜய் பேசுவதை நேரில் பார்த்துவிடுவது என்று ரசிகர்களும் முடிவெடுத்திருக்கின்றனர். ஆனால், இந்த நிகழ்ச்சியை விஜய் ரசிகர்களால் நேரில் கண்டுகளிக்க முடியாது என்பதை [மாஸ்டர் ஆடியோ ரிலீஸ்: ரசிகர்களுக்கு அனுமதி இல்லை](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/entertainment/2020/03/02/44/vijay-master-movie-audil-launch-no-entry-to-venue-for-vijay-fans) என்ற செய்தியில் மின்னம்பலத்தில் குறிப்பிட்டிருந்தோம்.
பிகில் இசை வெளியீடு நிகழ்ச்சியில் பல ஆயிரங்களுக்கு டிக்கெட்டை விற்றுவிட்டு, பெரும்பாலான ரசிகர்களை நிகழ்ச்சி அரங்குக்குள் அனுமதிக்காமல் போன துயர சம்பவம் நடைபெற்றது இப்போது வரையிலும் நினைவைவிட்டு நீங்கவில்லை. எனவே, அப்படிப்பட்ட சூழலைத் திரும்ப உருவாக்க வேண்டாம் என்ற முடிவுடன் நிகழ்ச்சியை ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் நடத்திவிட்டு, தொலைக்காட்சியில் நேரலை செய்துவிடலாம் என முடிவெடுத்திருக்கின்றனர்.
பெரிய அளவில் நிகழ்ச்சியை நடத்த அதிக செலவு செய்ய வேண்டும் என்பதுடன், அதன்மூலம் படத்துக்கு நெகட்டிவ் விமர்சனங்களும் கிடைக்கும் என்பதால் இந்த முடிவைப் படக்குழு எடுத்திருக்கிறது. மார்ச் 15ஆம் தேதி சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியை சன் டிவி மற்றும் அதன் மற்ற டிஜிட்டல் பிளாட்ஃபார்ம்கள் அனைத்திலும் கண்டுகளிக்க முடியும் என அறிவித்திருக்கின்றனர்.
**-சிவா**�,