^ரேஷன் கடை ஊழியர்களுக்கும் கடனுதவி!

Published On:

| By Balaji

கூட்டுறவு சங்க பணியாளர்களை போலவே, ரேஷன் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் கடன் உதவி வழங்கலாம் என்று தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர்களுக்கு பொதுவாகவே அதிக சலுகைகள் வழங்கப்படுகின்றன. குறைந்த வட்டியில் வீட்டுக்கடன் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் அடங்கும். சமீபத்தில், அரசு பள்ளி ஆசிரியர்களும், கல்வித் துறை சார்ந்த பணியாளர்களும் தங்கள் முக்கிய செலவான திருமணம், புதிய பைக் மற்றும் கார் வாங்க கடன் உதவி பெற்றுக் கொள்ளலாம் என்று பள்ளிக் கல்வி துறை அறிவித்திருந்தது.

இதுபோன்ற சலுகைகள் தற்போது ரேஷன் கடை ஊழியர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இன்று(அக்டோபர் 26) கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள அரசாணையில்,”பொது விநியோகத்திட்ட விற்பனையாளர்கள் மற்றும் ஊழியர்களின் ஊதியம் அரசால் நிர்ணயிக்கப்பட்டாலும், அவர்கள் பணிபுரியும் ரேஷன் கடைகள் எந்த கூட்டுறவு சங்கத்துடன் இணைக்கப்பட்டுள்ளதோ, அந்த சங்கத்தின் பணியாளராகவே கருதப்படுவார்கள்.

மேலும் ஊதிய ஒப்பந்தம் மற்றும் துணை விதிகளின்படி, சங்க பணியாளர்களுக்கு திருமணம், கல்விக்கடன், வாகனக்கடன், வீடு கட்டும் கடன் மற்றும் நுகர்வோர் கடன்கள் வழங்கப்படுவதைப் போன்றே, ரேஷன் கடையில் பணியாற்றும் விற்பனையாளர், கட்டுனர் ஆகியோருக்கு வழங்கப்படும். உரிய ஒழுங்குமுறை விதிகளை ஒவ்வொரு சங்கத்திலும் ஏற்படுத்தி தகுதியின் அடிப்படையில் ரேஷன் பணியாளர்களுக்கு முன்பணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மண்டல இணை பதிவளர்களுக்கு கூட்டுறவு சங்க பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு ரேஷன் கடை ஊழியர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.

**-வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share