கோவா: ஊழியர் ஒருவருக்கு கொரோனா – தரையிறங்க முடியாமல் தவிக்கும் 2,000 சுற்றுலாப் பயணிகள்!

Published On:

| By Balaji

நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் பார்ட்டியில் கலந்துகொண்டு கைது செய்யப்பட்ட சொகுசுக் கப்பல், ‘கொர்டெலியா குரூஸ்’. இந்தக் கப்பலில் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால், ‘சுற்றுலாப்பயணிகள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்த பிறகுதான் பயணிகள் கப்பலிலிருந்து தரையிறங்க அனுமதிக்கப்படுவார்கள்’ என்று கோவா அரசு தெரிவித்திருக்கிறது.

மகாராஷ்டிராவில் கொரோனா மூன்றாவது அலை பரவல் தீவிரமடையத் தொடங்கியிருக்கிறது. நாட்டிலேயே மகாராஷ்டிராவில்தான் ஒமைக்ரான் பரவலும் அதிகமாக இருக்கிறது.

இந்த நிலையில், மும்பையிலிருந்து கோவாவுக்கு சுமார் இரண்டாயிரத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகளுடன் புறப்பட்ட ‘கொர்டெலியா குரூஸ்’ சொகுசுக் கப்பலிலிருந்த ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதையடுத்து, அவர் கப்பலிலேயே தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்.

கப்பலில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான பயணிகள் இருப்பதால், கொரோனா பரவல் அச்சம் காரணமாகக் கப்பலை உடனடியாக கோவாவின் வாஸ்கோ துறைமுகத்தில் நிறுத்த முயன்றனர். ஆனால், அந்த மாநில அரசு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் ஒருவர் கப்பலில் இருப்பதாகக் கூறி அனுமதி மறுத்தது.

அதன் பிறகு நடந்த நீண்டநேர பேச்சுவார்த்தைக்குப் பிறகு கப்பல் துறைமுகத்தில் நிறுத்த அனுமதிக்கப்பட்டது. ஆனால், சுற்றுலாப் பயணிகள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்த பிறகுதான் பயணிகள் கப்பலிலிருந்து தரையிறங்க அனுமதிக்கப்படுவார்கள் என்று கோவா அரசு தெரிவித்திருக்கிறது.

இதுகுறித்து பேசியுள்ள சம்பந்தப்பட்ட கப்பல் ஏஜென்ட் கோவிந்த் என்பவர், “கப்பலிலிருந்த ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. அதனால், கப்பலிலிருந்த பயணிகள் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. சோதனை முடிவுகளுக்காகக் காத்திருக்கிறோம். அவை வந்த பிறகுதான் அனைவரும் கப்பலிலிருந்து இறங்க அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளார்.

**-ராஜ்**

.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share