Zகூடுதல் கவனமாக இருங்கள்: பிரதமர்!

Published On:

| By Balaji

கொரோனா குறித்து கூடுதல் கவனமாக இருக்க வேண்டுமென நாட்டு மக்களுக்கு பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமையில் அகில இந்திய வானொலி வழியாக “மன் கி பாத்”(மனதின் குரல்) என்ற நிகழ்ச்சி மூலம் பொதுமக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றிவருகிறார். கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இரண்டு மாதங்கள் கழிந்துவிட்டன. எனினும், கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், நாடு முழுவதும் ஜூன் 30ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டது.

இந்த நிலையில் மன் கீ பாத் மூலம் நாட்டு மக்களுக்கு இன்று (மே 31) உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “கடைசியாக நான் உங்களுடன் மன் கி பாத்தில் பேசியபோது, பயணிகள் ரயில்கள், பேருந்துகள், விமான சேவைகள் தடை செய்யப்பட்டிருந்தன. ஆனால் இந்த முறை தடைகள் நீக்கப்பட்டன. ஷெராமிக் சிறப்பு ரயில்கள், பிற சிறப்பு ரயில்கள் மற்றும் விமானங்கள் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ளன.

பெரும்பாலான பொருளாதார செயல்பாடுகள் தற்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஆறு அடி தூரம் சமூக இடைவெளி பின்பற்றுவதிலும், மாஸ்க் அணிவதிலும், முடிந்தவரை வீட்டில் தங்குவதிலும் எந்தவித தளர்ச்சியும் இருக்கக் கூடாது. அனைவரின் ஆதரவு காரணமாக கொரோனாவுக்கு எதிராக வலுவாக போராடினோம். இந்த போரில் வெற்றி பெற நாம் நெடுந்தூரம் செல்ல வேண்டும். கொரோனாவிற்கு எதிரான போர் மக்கள் இயக்கமாக மாற வேண்டும். நாம் இப்போது அதிக விழிப்புடன் இருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

மற்ற நாடுகளைப் பார்க்கும்போது, இந்தியர்களின் சாதனை எவ்வளவு பெரியது என்பதை நாம் புரிந்துகொள்கிறோம். நமது மக்கள்தொகை மற்ற நாடுகளை விட பல மடங்கு அதிகம். அத்துடன் சவால்களும் வேறுபட்டவை. கொரோனா மற்ற நாடுகளைப் போல வேகமாக பரவவில்லை, இறப்பு விகிதமும் குறிப்பிடத்தக்க அளவு குறைவாக உள்ளது என்று குறிப்பிட்ட பிரதமர்,

“கொரோனாவால் ஏற்பட்ட சிரமங்களால் பாதிக்கப்படாத பிரிவினர் இந்தியாவில் யாருமில்லை. இருப்பினும், மோசமாக பாதிக்கப்பட்டவர்கள் ஏழைகள் மற்றும் தொழிலாளர்கள். அவர்களின் வேதனையையும், சோதனையையும் வார்த்தைகளில் வெளிப்படுத்த முடியாது. நாட்டில் பல்வேறு இடங்களில் சொந்த ஊருக்குச் செல்ல புலம்பெயர் தொழிலாளர்கள் பல்வேறு பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடுகின்றனர். புலம்பெயர் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கிராமங்களில் வேலைவாய்ப்பு உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

மேலும், “மதுரையைச் சேர்ந்த மோகன் தனது மகளின் படிப்புச் செலவுக்காக வைத்திருந்த பணத்தை ஏழைகளுக்குக் கொடுத்துள்ளார். தனது வருமானத்தை மக்களுக்கு செலவிட்ட மோகனுக்கு பாராட்டுக்கள். சுயசார்பு திட்டம் இந்தியாவை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லும். பயிர்களை அழிக்கும் வெட்டுக்கிளித் தாக்குதலில் இருந்து விவசாயிகளை காக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வெட்டுக்கிளித் தாக்குதலை தடுக்க முயற்சி எடுக்கப்படும்” என்றும் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார் பிரதமர்.

**எழில்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share