கோலாகலமாக நடைபெறும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் விழா!

Published On:

| By Balaji

கோலாகலமாக நடந்துவரும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசி உற்சவத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவில் நடந்த வலியபடுக்கை பூஜை பக்தியின் அடையாளமாகவே இருந்தது.

கன்னியாகுமரி மாவட்டமென்றாலே இங்குள்ள பிரபலமான கோயில்கள் நினைக்கப்படும். இதில் ஒன்று நாகர்கோவில் அருகில் உள்ள மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில். கடற்கரையோரத்தில் அமைந்திருக்கும் இக்கோயிலில் புற்றிலிருந்து தோன்றிய புகழ்பெற்ற பகவதி அம்மன் ஆண்டுதோறும் வளர்வதாகவே ஐதீகம் கொள்கின்றனர் பக்தர்கள்.

இந்த ஆலயம் பெண்களுக்கான சபரிமலையாகவும் அழைக்கின்றனர்.

எப்போதும் இந்த ஆலயத்தில் விஷேச வழிபாடு இருந்தாலும் மாசி உற்சவம் மிக பிரபலம்.

இந்த ஆண்டுக்கான உற்சவம் பிப்ரவரி 28இல் தொடங்கி வரும் மார்ச் 9ஆம் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

கடந்த பிப்ரவரி 28இல் அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம். பஞ்சாபிஷேகம், காலை 6.30 மணிக்கு தீபாராதனை தொடர்ந்து திருக்கொடியேற்றம் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.

தினமும் மதியம் 1 மணிக்கு உச்சி பூஜையும் மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் இரவு 9 மணிக்கு அத்தாழ பூஜையும் நடக்கிறது. விழாவின் 3ஆம் உற்சவம் முதல் 9ஆம் உற்சவம் வரை காலை 9.30 மணிக்கும், இரவு 9.30 மணிக்கும் அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி வருதலும், யானை மீது களப பவனியும் வரும் நிகழ்ச்சியும் பக்திபூர்வமானது

6ஆம் உற்சவத்தில் மார்ச் 6ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு வலியபடுக்கை என்ற மகா பூஜை நடைபெற்றது. இந்தப் பூஜை வருடத்தில் மூன்று முறை நடக்கும், திருவிழாவின் 6ஆம் நாள் அன்றும், கார்த்திகை மாத கடைசி வெள்ளிக்கிழமை அன்றும், மீனபரணி கொடை விழா அன்றும் நடைபெறும்.

மார்ச் 6ஆம் தேதி 12 மணிக்கு வலியபடுக்கை என்னும் மகா பூஜை நடந்தது. இதனையொட்டி பூஜையில் பொரி, அவல், கற்கண்டு, பலாப்பழம், மாம்பழம், வாழைப்பழம் உள்பட பழவகைகள், மண்டையப்பம், அப்பம், அரவணை, திரளி (கொழுக்கட்டை) போன்ற வழிபாட்டு பொருட்கள் இளநீர், கரும்பு, தேங்காய் போன்றவை அம்மனுக்கு முன் குவியலாக படைக்கப்பட்டு அலங்கார பூஜை நடந்தது.

இதில் பல்வேறு பகுதியில் இருந்தும், கேரள மாநிலத்தில் இருந்தும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். நேற்று (மார்ச் 7) காலை பக்தர்களுக்கு வலியபடுக்கை பிரசாதம் வழங்கப்பட்டது.

9ஆம் நாள் விழாவில் இரவு 9.30 மணிக்கு பெரிய சக்கர தீவட்டி உடன் அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனியும், 10ஆம் திருவிழாவன்று அதிகாலை 2 மணிக்கு மண்டைக்காடு சாஸ்தா கோயிலில் இருந்து யானை மீது களப பவனியும், காலை 3.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதலும், 4.30 மணிக்கு அடியந்திர பூஜை, குத்தியோட்டமும், இரவு 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதலும், இரவு 12 மணிக்கு ஒடுக்கு பவனி வருதலும், தொடர்ந்து ஒடுக்கு பூஜையும் தீபாராதனையும் நடக்கிறது. இந்த பத்து நாட்கள் திருவிழாவிலும் பல்லாயிரக்கணக்கான பெண்கள் இங்கு வந்து அம்மனுக்கு மண்பானையில் பொங்கல் இட்டு நேர்ச்சை செலுத்துவது விசேஷம்.

பனைக்காடாக இருந்த இந்தப் பகுதியில் சுயம்புவாக எழுந்த அம்மன் மண்டைக்காடு பகவதியம்மன். ஆரம்பத்தில் காளிதேவியாக வழிபடப்பட்டவள், பின்னர் கேரள மக்களின் வழக்கப்படி ‘பகவதி அம்மன்’ என்று அழைக்கப்பட்டாள். ‘மந்தைக்காடு’ என்ற பெயரே மருவி, ‘மண்டைக்காடு’ என்று மாறியதாக தல வரலாறு கூறுகிறது.

மாசி மாத ‘கொடை விழா’ இந்த ஆலயத்துக்குப் புகழ் சேர்க்கும் ஒரு திருவிழா. 41 நாட்கள் விரதமிருந்து, இருமுடி சுமந்து, கால்நடையாக இங்கு வரும் பக்தர்கள் அதிகம். சுமார் 15 அடி உயரம் வரை வளர்ந்திருக்கும் பெரிய புற்றே இங்கு அம்மனாக வணங்கப்படுகிறது.

இந்த புற்று வடிவம் வளர்ந்துகொண்டே வருவதாக அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் கூறுகிறார்கள். நாகர்கோவில், தக்கலை, குளச்சல் ஊர்களில் இருந்து பஸ் வசதியுள்ளது. இங்கு வரும் பக்தர்கள் கோயிலில் தரிசித்து அருகில் அப்படியே இங்கு சீறிவரும் கடல் அலைகளை ரசிப்பதும் மிக ரசிப்புக்குரியது. முட்டம் கடற்கரை, பத்தனாபுரம் பேலஸ், திருவட்டார் ஆதிகேசவபெருமாள் கோயில், திற்பரப்பு அருவி எனப் பல்வேறு சுற்றுலா ஸ்தலங்கள் அருகில் உள்ளன.

**- சக்தி பரமசிவன்**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share