உங்களால் அதிகமாக எவ்வளவு எடை தூக்க முடியும்? நம்மில் பலருக்கு வீட்டில் இருக்கும் சிலிண்டர்களை தூக்குவது கடினமாக உள்ள நிலையில் ஒருவர் ஒரு விரலில் 129 கிலோ எடையை தூக்கி உள்ளார். இதன் மூலம் இவர் புதிய கின்னஸ் சாதனையை படைத்துள்ளார். மேலும் 10 ஆண்டுகால உலக சாதனையை முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த உலக சாதனையை நிகழ்த்தியவர் 48 வயதான ஸ்டீவ் கீலர். இவர் தனது 18 வயதில் இருந்தே கராத்தே பயிற்சி செய்து வருகிறார். அப்பொழுது ஒரு நாள் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது தனது நடுவிரலால் மட்டும் ஒரு சேட் எடையை முழுமையாக தூக்கி உள்ளார். அதற்குப் பின்னர்தான் கின்னஸ் உலக சாதனையை முறியடிக்க பயிற்சி தொடங்கியது.
முயற்சியின் போது, அவர் நடுவர்கள் முன்னிலையில் ஒரே நேரத்தில் ஆறு இரும்பு எடை டிஸ்க்குகளை தூக்கி உள்ளார். ஒரு சிறிய 10 கிலோ எடையும், ஒரு 20 கிலோ எடையும், 25 கிலோவுக்கும் மேல் உள்ள மூன்று எடைகளையும், ஒரு 26 கிலோ எடையும் ஒரே நேரத்தில் தூக்கி நடுவர்களையும், பார்வையாளர்களையும் ஆச்சரியப்படுத்தினார்.
இந்த சாதனையை குறித்து கீலர் கூறுகையில், “எடைகளை தூக்கிய பொழுது எனது விரல் மிகக்கடுமையாக வலித்தது ஆனால் எனது விரல் எவ்வளவு வலிமையாக இருக்கிறது என்பதை உணர்ந்தேன். உலக சாதனையை நிகழ்த்தியது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. நான் அந்த உலக சாதனைக்காக கடந்த நான்கு மாதங்களாக பயிற்சி எடுத்து வருகிறேன். இப்பொழுது அந்த சாதனையை நிகழ்த்தி விட்டேன்.” என்று பெருமிதம் தெரிவித்தார்.
.