நீட் தேர்வு முறைகேடு தொடர்பான வழக்குகளை சிபிஐ முறையாக கண்காணிக்கும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நம்புவதாக தெரிவித்துள்ளது.
கேரளா மாநிலம் உன்னியாலைச் சேர்ந்த ரஷீத் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அதில், நீட் தேர்வில் முறைகேடு செய்ததாக பல மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான விசாரணையின்போது என் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.
இந்த வழக்கில் எனது பெயர் தவறுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. ஆள்மாறாட்டம் செய்ததாக 10 பேரின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டாலும் உறுதியாக ஆள்மாறாட்டம் செய்தவர்கள் குறித்த விவரங்கள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த வழக்கில் குற்றவாளிகளாக கருதப்படுபவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே கைதுசெய்யப்பட்டு சிறையில் இருக்கிறேன். தனக்கு ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை தேனி மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தனக்கு ஜாமீன் அளிக்கும் பட்சத்தில் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குகிறேன். நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்படுகிறேன். அதனால், தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும்” எனகூறியிருந்தார்.
இந்த மனு மீதான கடந்த விசாரணையின்போது, நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து எந்தெந்த மாநிலங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது, அதன் நிலை என்ன என்பது குறித்த விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய சிபிஐக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், மீண்டும் இன்று(மார்ச் 29) விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், டெல்லியில் இதேபோல நீட் முறைகேடு தொடர்பாக வழக்கு பதியப்பட்டு உள்ளதாகவும் அதுகுறித்த தகவல்களை சேகரித்து பதில் மனு தாக்கல் செய்ய காலஅவகாசம் வழங்க வேண்டுமெனவும் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நீட்தேர்வு முறைகேடு தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐ முறையாக கண்காணிக்கும் என நம்புவதாக தெரிவித்த நீதிபதி, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார். ரஷீத் ஜாமீன் கோரிய வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
**வினிதா**
�,”