]தமிழக எம்.பி.க்களின் கவனத்திற்கு…..

public

கொரோனா வைரஸ் தாக்கத்தைத் தொடர்ந்து, நாடு திரும்ப முடியாமல் மலேசியாவில் சிக்கித் தவிக்கும் இந்தியத் தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை மாவட்ட முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன், தமிழக முதல்வருக்கும் எம்.பி.க்களுக்கும் கோரிக்கை விடுத்துள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாகப் பல நாடுகளிலும் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மீட்க மத்திய அரசு முயன்று வருகிறது. நேற்று இத்தாலியிலிருந்து 263 இந்தியர்களை மீட்டு வந்தது. இத்தாலியில் இந்தியர்கள் சிக்கித் தவித்தது போல், மலேசியாவில் சிக்கி தவிக்கும் 300க்கும் மேற்பட்ட இந்திய வாழ் தமிழர்களை மீட்க வேண்டும் என்ற கோரிக்கை தற்போது எழுந்துள்ளது.

இதுகுறித்து கராத்தே தியாகராஜன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியாவிற்குச் சுற்றுலாப் பயணிகளாக வந்து கொரோனா வைரஸ் எதிரொலியாக நாடு திரும்ப முடியாமல் மலேசிய வாழ் தமிழர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தமிழகத்தில் சிக்கித் தவிக்கின்றனர். அவர்களில் 600 பேர் சென்னையிலும், 500 பேர் திருச்சியிலும் தங்கியுள்ளனர்.

இதை அறிந்ததும் மலேசிய இந்திய காங்கிரஸ் தலைவரும், மலேசிய ராஜ்யசபா சபாநாயகருமான டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், அமைச்சர் டத்தோ சரவணன் ஆகியோர் மலேசிய வாழ் தமிழர்கள் மீது உள்ள அக்கறை காரணமாக, இந்திய ரூபாயில் 2 கோடி ரூபாய் பணம் செலுத்தி தமிழ்நாட்டில் சிக்கி தவிக்கும் மலேசிய வாழ் தமிழர்களை ஆறு ஏர் ஏசியா விமானம் மூலம் அழைத்து செல்ல ஏற்பாடு செய்துள்ளார்கள்.

ஆனால் மத்திய அரசு திருச்சிக்கு ஒரு விமானமும் சென்னைக்கு ஒரு விமானமும் மட்டுமே நேற்று அனுமதி அளித்தது, ஒவ்வொரு விமானத்திலும் 185 பயணிகள் மட்டுமே பயணிக்க முடியும். மீதமுள்ள பயணிகளை மலேசியா திரும்பி செல்ல மத்திய அரசு இதுவரை அனுமதிக்கவில்லை. இதுகுறித்து நான் மலேசிய இந்திய காங்கிரஸ் தலைவரிடம் கைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது, ’ஏற்கனவே ஏற்பாடு செய்த ஆறு விமானங்களில் இரண்டு விமானங்களுக்கு மட்டுமே நேற்று அனுமதி அளித்ததை தொடர்ந்து, கோலாலம்பூரிலிருந்து திருச்சி மற்றும் சென்னைக்கு காலியாக வந்த விமானம் மூலம் ஏறக்குறைய 350 மலேசியத் தமிழர்களை அழைத்து வந்து விட்டோம்.

மேலும் இந்தியாவில் மீதமிருக்கும் மலேசியா தமிழர்களை அழைத்து வர இன்னும் நான்கு விமானங்களுக்கு லேண்டிங் பர்மிஷன் பெற இந்திய அரசிடம் அனுமதி கேட்டுள்ளோம். அது கிடைத்தவுடன் அந்த 4 விமானங்கள் கோலாலம்பூரிலிருந்து காலியாகத்தான் தமிழகத்திற்கு வர போகிறது. எனவே தமிழகம் வர இயலாமல் இங்கு சிக்கித் தவிக்கும் இந்திய தமிழர்களுக்கு எங்கள் அரசாங்கத்திடம் எக்ஸிட் பர்மிட் கொடுத்து. 4 விமானங்களில் அனுப்பி வைக்கத் தயாராக இருக்கிறோம்’ என்று கூறினார்.

சில தவிர்க்க முடியாத காரணங்களை வைத்து அவர்களைத் தமிழகம் அழைத்து வர காலதாமதம் செய்வது ஏற்புடையதல்ல. மலேசியாவில் இருந்து அவர்கள் வரும்போது கொரோனா தொற்று குறித்து விமான நிலையத்தில் பரிசோதித்து பின் சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் இருக்கும் தண்டையார்பேட்டையில் உள்ள communicable disease hospital-ல் சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தி அவர்களைப் பரிசோதனைக்கு உட்படுத்தி தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். இந்த மருத்துவமனை 16 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்டது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்காகவே தனி வார்டு அமைக்கலாம்.

எனவே காலம் தாழ்த்தாமல் முதல்வரும், தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் துரிதமாக செயல்பட்டு மத்திய அரசிடம் பேசி மலேசியாவில் சிக்கி தவிக்கும் 300க்கும் மேற்பட்ட இந்தியர்களை அழைத்து வர வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் மலேசியாவிலிருந்து ஓரிரு நாட்களில் வரவிருக்கும் 4 விமானங்கள் அங்கிருந்து காலியாகத்தான் வரப்போகின்றன. அதில் இந்த 300க்கும் மேற்பட்ட இந்திய தமிழர்களை ஏற்றி அனுப்ப மலேசிய இந்தியக் காங்கிரஸ் தலைமை ஒப்புக்கொண்டுள்ளது. இந்த வாய்ப்பினையும் சரியாக பயன்படுத்தி அவர்களைத் தமிழகம் கொண்டு வந்து விடலாம் என்றும் கராத்தே தியாகராஜன் குறிப்பிட்டுள்ளார்.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *