மலேசியா நாட்டில் கொலை, போதைப் பொருள் கடத்தல் போன்ற குற்றங்களுக்கு மரண தண்டனை கட்டாயமாக உள்ளது. இந்நிலையில் கட்டாய மரண தண்டனையை ரத்து செய்ய மலேசிய அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. தற்பொழுது வரை மலேசியாவில் 11 குற்றங்களுக்கு சட்டப்படி மரண தண்டனைகள் கட்டாயமாக விதிக்கப்பட்டு வருகின்றன. மேலும் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது. தற்பொழுது மலேசியாவில் 1300க்கும் மேற்பட்டோர் மரண தண்டனை பெற்று சிறையில் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவில் கொலை, போதைப்பொருள் கடத்தல், தீவிரவாதம், கடத்தல், துப்பாக்கி வைத்திருவைத்திருத்தல் ஆகிய குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2018ஆம் ஆண்டு கட்டாய மரணத் தண்டனையை நீக்க அரசு உத்தரவிட்டது, ஆனால் எதிர்க்கட்சியாளர்கள் மற்றும் கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பங்களின் எதிர்ப்புகளால் அந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டது.
இந்நிலையில், மலேசியாவில் கட்டாய மரண தண்டனையை ரத்து செய்ய அமைச்சரவை ஒப்புக்கொண்டதாக சட்ட அமைச்சர் வான் ஜுனைடி துவாங்கு ஜாபர் தெரிவித்துள்ளார். அதற்கு பதிலாக சில கடுமையான தண்டனைகளை விதிக்க ஆலோசனை நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் இது குறித்த ஆய்வுகள் நடத்தப்படும் என்று அவர் கூறினார்.
தற்பொழுது மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருக்கும் 1300 கைதிகளில் பெரும்பாலானவர்கள் போதைக் கடத்தல் வழக்குகளில் கைது செய்யப்பட்டனர். கட்டாய மரண தண்டனையை நீக்க மலேசிய அரசு ஒப்புதல் அளித்துள்ள நிலையில் இவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனை நிறைவேறாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
.