ஆளுநரின் பரிந்துரையை ஏற்று மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் 288 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் நடந்த தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட பாஜகவுக்கு 105 இடங்களும், சிவசேனாவுக்கு 56 இடங்களும் கிடைத்தன. ஆட்சி அமைக்க போதுமான இடங்கள் பாஜக – சிவசேனா கூட்டணியிடம் இருந்தபோதும், கருத்தொற்றுமை இல்லாததால், தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் இந்தக் கூட்டணி ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. சட்டப்பேரவைக் காலம் முடிந்ததையடுத்து, ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி முதல் பெரும்பான்மைக் கட்சியான பாஜகவை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்தார். பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் இல்லாததையடுத்து, ஆளுநர் அழைப்பை ஏற்க மறுத்த பாஜக, ஆட்சி அமைக்கத் தயாரில்லை எனத் தெரிவித்தது.
அதன் பின்னர், இரண்டாவது பெரும்பான்மைக் கட்சியான சிவசேனாவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். 56 எம்எல்ஏக்கள் வைத்துள்ள சிவசேனாவுக்கு ஆதரவளிக்க காங்கிரஸ் -தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தயக்கம் காட்டின. கூடுதலாக 2 நாட்கள் அவகாசம் கேட்ட சிவசேனாவின் கோரிக்கையை ஆளுநர் நிராகரித்தார்.
அதன்பின்னர், மூன்றாவது பெரிய கட்சியான தேசியவாத காங்கிரஸை ஆட்சியமைக்க நேற்று(நவம்பர் 11) ஆளுநர் அழைப்பு விடுத்திருந்தார். இன்று இரவு 8.30க்குள் பெரும்பான்மையை நிரூபிக்க கால அவகாசம் கொடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ்-சிவசேனா ஆகிய கட்சிகள் மீண்டும் ஆட்சியமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தின.
எனினும் சிவசேனா கட்சிக்கு ஆதரவு அளிப்பதில் காங்கிரஸ் கட்சிக்குள் இருவேறு கருத்துகள் இருந்ததால் முடிவு எடுப்பதில் தாமதம் நிலவியதாக கூறப்பட்டது. அதன் பின்னர், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு(என்சிபி) இடையிலான பேச்சுவார்த்தையில், சில நிபந்தனைகள் அடிப்படையில் தான் கூட்டணியை தொடர முடியும் என என்சிபி கட்சித் தலைமை தெரிவித்தது. இதனால், இறுதி முடிவெடுப்பதில் மீண்டும் இழுபறி ஆனது.
இந்நிலையில், குடியரத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி பரிந்துரைத்தார். இதனையடுத்து, மகாராஷ்டிர அரசியல் நிலவரம் தொடர்பாக விவாதிக்க மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. மகாராஷ்டிராவில் புதிய அரசு அமைவதற்கான வாய்ப்பு இல்லாத சூழலில் அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தப்படுவது என முடிவெடுக்கப்பட்டது.
அதனடிப்படையில் மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த ஒப்புதல் பெறும் கோப்பு குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தேர்தல் முடிவுகள் வெளிவந்து கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் கடந்த பின்னரும் கூட, அரசாங்கம் அமைப்பதில் முட்டுக்கட்டை ஏற்பட்டதைத் தொடர்ந்து மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தும் அமைச்சரவை முடிவுக்கு ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம் மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்துள்ளது.
மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்ட பின்னர், உள்துறை அமைச்சகம், “மகாராஷ்டிராவில் அரசு அமைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டதாக ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி ஜனாதிபதியிடம் கூறினார். ஆனால், அரசாங்கம் அமைப்பதற்கான எந்தவொரு சாத்தியத்தையும் அவரால் காண முடியவில்லை. எனவே ஜனாதிபதி ஆட்சிக்காக அவர் கடிதம் எழுதினார்” என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி, மாநிலத்தில் ஜனாதிபதியின் ஆட்சியை பரிந்துரைத்ததற்காக, அரசியலமைப்பு செயல்முறையை கேலி செய்ததாக குற்றம் சாட்டினார் காங்கிரஸின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா. மேலும், இது நேர்மையற்றது மற்றும் அரசியல் நோக்கம் கொண்டது” எனத் தெரிவித்தார்.
மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷ்யரி அடுத்த அரசாங்கத்தை அமைப்பதற்கு தேவையான ஆதரவு கடிதங்களை சமர்ப்பிக்க கட்சிக்கு அதிக நேரம் ஒதுக்க மறுத்ததை எதிர்த்து சிவசேனா இன்று உச்ச நீதிமன்றத்தை நாடியது. என்.சி.பி மற்றும் காங்கிரஸின் ஆதரவோடு சாத்தியமான கூட்டணி அரசாங்கத்தை அமைக்க முயற்சிக்கும் சிவ சேனா, இரு கட்சிகளிடமிருந்தும் தேவையான கடிதங்களைப் பெறத் தவறிவிட்டது.
சிவசேனா மூத்த தலைவர் அனில் பராப் இது பற்றி கூறுகையில், “தேவையான ஆதரவு கடிதங்களை சமர்ப்பிக்க எங்களுக்கு மூன்று நாட்கள் அவகாசம் வழங்குமாறு நாங்கள் கவர்னரிடம் கேட்டுக் கொண்டோம். எங்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தால், பெரும்பான்மையை நிரூபித்திருப்போம்” எனக் கூறினார். மூத்த வழக்கறிஞரும் காங்கிரஸ் தலைவருமான கபில் சிபல் உச்சநீதிமன்றத்தில் சிவசேனாவை பிரதிநிதித்துவப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டதை எதிர்த்து சிவசேனா உச்சநீதிமன்றத்தில் இரண்டாவது மனு தாக்கல் செய்யக்கூடும் என்று பி.டி.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளதால் அதற்கு எதிராக சிவசேனா இரண்டாவது மனுவை தாக்கல் செய்யும் என்று சிவசேனா சார்பாக முதல் மனுவை தாக்கல் செய்த வழக்கறிஞர் சுனில் பெர்னாண்டஸ் தெரிவித்துள்ளார்.�,”