வெளி மாநிலங்களுக்கு பறக்கும் சிவசேனா, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்!

Published On:

| By Balaji

மகாராஷ்டிர மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் முக்கிய தலைவரான அஜித் பவார் ஆதரவோடு அரசு அமைத்த முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் இன்று (நவம்பர் 23) பிற்பகல் மும்பையில் இருக்கும் பாஜக அலுவலகத்தில் கட்சியினரை சந்தித்தார். அப்போது, ‘அஜித் பவாருடன் இணைந்து நிலையான அரசை பாஜக அமைக்கும்’ என்றார்.

ஆனால் மதியம் ஒரு மணியளவில் சவான் மையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், “அஜித் பவாரோடு பத்து அல்லது 11 எம்.எல்.ஏ.க்கள்தான் சென்றிருக்கிறார்கள். அவர்களிலும் பலர் இப்போது இங்கே வந்துவிட்டார்கள்” என்று அவர்களை அறிமுகப்படுத்தினார். மேலும், “ எங்கள் கூட்டணி சிவசேனாவுடன் தொடர்கிறது. பட்னவிஸ் ஆட்சி அமைத்தாலும் அவரால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது. எங்களிடம் 170 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருக்கிறது” என்று கூறினார்.

இந்தப் பின்னணியில் மகாராஷ்டிராவில் இருக்கும் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தங்களது எம்.எல்.ஏ.க்கள் ஒவ்வொருவரையும் பொத்திப் பொத்திப் பாதுகாக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

**மபி செல்லும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்**

தேசியவாத காங்கிரஸ், சிவசேனாவோடு கூட்டணிப் பேச்சு தொடங்கியபோதே காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மும்பையில் இருந்து காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலமான ராஜஸ்தான் தலைநகர் ஜெய்பூருக்கு அழைத்துச் செல்லப்பட்டுவிட்டனர். அவர்களில் சிலர் குஜராத்துக்கும் டெல்லிக்கும் சென்றுவிட்டதாக தகவல் பரவியது.

இன்று மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல், “எங்கள் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்றத்தில் பட்னவிஸின் ஆட்சியை அகற்றத் தயாராக ஒற்றுமையோடு இருக்கிறார்கள். ஒரு சில எம்.எல்.ஏ.க்கள் தங்கள் கிராமத்தில் இருக்கிறார்கள். பெரும்பாலானோர் மும்பையில்தான் இருக்கிறார்கள்” என்று கூறினார். ஆனால் அவர்களை மீண்டும் ஜெய்பூருக்கே அழைத்துச் செல்லாமல் மத்தியபிரதேச தலைநகர் போபாலுக்கு அழைத்துச் செல்லும் பணிகளை காங்கிரஸ் இன்று தொடங்கிவிட்டது. மகாராஷ்டிராவின் 44 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களையும் பாதுகாக்கும் பொறுப்பு மபி மூத்த காங்கிரஸ் தலைவர் திக் விஜய் சிங்கிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

**ஜெய்ப்பூர் செல்லும் சிவசேனா எம்.எல்.ஏ.க்கள்**

மும்பையில் இருக்கும் புகழ் பெற்ற லலித் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டிருக்கும் சிவசேனா எம்.எல்.ஏ.க்களை இன்று பகல் அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “கவலைப்படாமல் இருங்கள். பாஜகவிடம் பெரும்பான்மை இல்லை. நம்மிடமே பெரும்பான்மை இருக்கிறது. எனவே சிவசேனாவில் இருந்துதான் முதல்வர் வருவார்” என்று அவர்களிடையே பேசினார்.

அவர்கள் அனைவரும் இன்றே சாலை மார்க்கமாக ஜெய்ப்பூருக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். தனது 56 எம்.எல்.ஏ.க்களையும் பாஜகவிடம் இருந்து பாதுகாக்கும் பொருட்டு காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலமான ராஜஸ்தானுக்கு அழைத்துச் செல்கிறது சிவசேனா.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், “மகாராஷ்டிர மாநிலத்தில் காங்கிரஸ் அமைத்திருக்கும் அகாதி கூட்டணியில் இருந்து எந்த எம்.எல்.ஏ. வந்தாலும் ராஜஸ்தானில் பாதுகாப்பு அளிப்போம்” என்று கூறியிருக்கிறார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share