மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், துணை முதல்வர் அஜித் பவார் பதவியேற்புக்கு எதிராக சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கு இன்று (நவம்பர் 24) காலை 11.30க்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
மத்திய அரசு, மகாராஷ்டிர மாநில அரசு, தேவேந்திர பட்னவிஸ், அஜித் பவார் ஆகியோர் இந்த வழக்கில் எதிர் மனு தாரர்களாக சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். இவ்வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் என்.வி.ரமணா, அசோக் பூஷண், சஞ்சய் கண்ணா ஆகியோர் 11.30 மணியளவில் உச்ச நீதிமன்றத்துக்கு வந்தார்கள்.
இதில் மத்திய அரசு தரப்பு சார்பாக சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தா, மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோத்தகி ஆகியோரும் மனுதாரர்களான சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபிஷேக் சிங்வி உள்ளிட்டோரும் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்கிறார்கள்.
முதலில் மனுதாரர் சார்பில் கபில்சிபல் தனது வாதத்தைத் தொடங்கினார். “ஞாயிற்றுக் கிழமையும் அதுவுமாக உங்களை தொந்தரவு செய்வதற்கு முதலில் மன்னிப்பு கோருகிறேன். இந்த வழக்கை அவசர வழக்காக ஏற்றுக் கொண்டமைக்கு நன்றி.
மகாராஷ்டிராவில் தேர்தலுக்கு முந்தைய கூட்டணி என்பது உடைந்துபோய்விட்டது. எனவே அதுபற்றி இந்த வழக்கில் பேசவேண்டியதில்லை. தேர்தலுக்குப் பிறகான கூட்டணி உருவாக்கப்பட்டு அதன் முதல்வராக உத்தவ் தாக்கரே ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கிறார். அவர்களுக்கு போதுமான பெரும்பான்மையும் இருக்கிறது.
இந்த நிலையில் மகாராஷ்டிர மாநில ஆளுநரின் செயல் என்பது வினோதமானது மட்டுமல்ல, யாருடைய உத்தரவுகளின், வழிகாட்டுதலின்படி ஆளுநர் செயல்பட்டு வந்திருக்கிறார் என்ற தோற்றத்தை அவரது செயல்பாடுகள் எடுத்துக் காட்டுகின்றன. அவர்களுக்குப் பெரும்பான்மை இருந்தால், இருப்பதாக அவர்கள் நம்பினால் இன்றே அவர்கள் சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்திக் காண்பிக்க வேண்டும்” என்றார்.
அப்போது குறுக்கிட்ட பாஜக தரப்பு வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, “ இந்த வழக்கை இன்று இவ்வளவு அவசரமாக விசாரிக்க வேண்டிய அவசியமே இல்லை” என்று கூற நீதிபதிகள் அவரைப் பார்த்து, “வழக்கை எப்போது விசாரிக்க வேண்டும் என்று நீங்கள் சொல்லாதீர்கள். தலைமை நீதிபதி பட்டியலிட்டு எங்களை விசாரிக்கச் சொல்லியிருக்கிறார்” என்று பதிலளித்தனர்.
தொடர்ந்த கபில் சிபல், “ஒரு மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்றாலோ, நீக்க வேண்டும் என்றாலோ மத்திய அமைச்சரவை கூடி முடிவெடுத்திருக்க வேண்டும். அப்படி நடந்ததா? குடியரசுத் தலைவர் ஆட்சியை நீக்கக் கோரி ஆளுநர் அளித்த பரிந்துரை பாரபட்சமானதாக இருக்கிறது. இது எல்லாமே டெல்லியில் இருந்து சென்ற உத்தரவுகள் மூலம் ஆளுநர் செயல்பட்டிருக்கிறார் என்பதைத் தெளிவாக்குகிறது. எங்களுக்கு பெரும்பான்மை இருக்கிறது. எனவே மகாராஷ்டிர சட்டமன்றத்தை உடனே கூட்டி பட்னவிஸ் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும்” என்று கோரினார் கபில் சிபல்.
தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் கட்சிக்காக வாதாடிய மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி,
“அரசு அமைப்போருக்கு தேவையான பெரும்பான்மையான ஆதரவு இருக்கிறதா என்று ஆவண ரீதியாக திருப்தி அடைந்த பிறகே ஆளுநர் அரசமைக்க அழைக்க வேண்டும். ஆதரவுக் கடிதங்கள், எம்.எல்.ஏ.க்களின் கையெழுத்து, அவர்களின் வருகை பதிவு இவற்றின் மூலம் ஆளுநர் அந்த ஆவணங்களை உறுதிப்படுத்த வேண்டும். ஆனால் மகாராஷ்டிர ஆளுநர் இதுபோன்ற ஆவணங்களின் மூலமாக முடிவெடுத்தாரா? தேசியவாத காங்கிரஸ் கட்சி நேற்று கூட்டிய எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் 54 பேர்களில் 41 பேர் அஜித் பவாரை சட்டமன்றக் கட்சித் தலைவர் பதவியில் இருந்து நீக்கிய ஆவணத்தில் கையெழுத்திட்டிருக்கிறார்கள். இந்நிலையில் அஜித் பவார் எப்படி துணை முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டிருக்க முடியும்?
ஏற்கனவே பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்தும், தங்களுக்கு பெரும்பான்மை இல்லை என்று கூறி அதை தவிர்த்தார் பட்னவிஸ். ஆனால் நேற்று காலை அவசர அவசரமாக ஆளுநர் எந்த அடிப்படையில் பட்னவிஸுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்?
எனவே இதில் தீர்வு காண சிறந்த வழி உடனடியாக சட்டமன்றத்தைக் கூட்டி பட்னவிஸ் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும். இல்லையென்றால் குதிரை பேரத்துக்குதான் அது வழிவகுப்பது போல அமையும்” என்று வாதாடினார்.
பாஜக சார்பில் வாதாடிய முகுல் ரோத்தகி, “மகாராஷ்டிராவில் ஏற்கனவே ஓர் அரசு அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் ஞாயிற்றுக் கிழமை விடுமுறை நாளில் இப்படி ஒரு விசாரணையே தேவையில்லை. கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் இதுபோன்று உச்ச நீதிமன்றத்துக்கு வந்தபோது உச்ச நீதிமன்றம் அவர்களை அம்மாநில உயர் நீதிமன்றத்துக்கு செல்லுமாறு கூறியது. எனவே மனு தாரர்கள் முதலில் மும்பை உயர் நீதிமன்றத்தைத்தான் அணுகியிருக்க வேண்டும்.
மேலும் ஆளுநரின் முடிவில் யாரும் தலையிட முடியாது. வேண்டுமென்றால் பெரும்பான்மையை நிரூபிக்கச் சொல்லிதான் கேட்க முடியுமே தவிர ஆளுநரை கேள்வி கேட்க முடியாது. ஆளுநர் திருப்தி அடைந்தால் ஆட்சி அமைக்க அழைக்க முடியும்” என்று வாதாடினார்.
மத்திய அரசுக்காக வாதாடிய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “சிவசேனா-காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கு ஆட்சி அமைக்கும் அடிப்படை உரிமை கிடையாது. எனவே உச்ச நீதிமன்றம் இன்றே இதில் உத்தரவு பிறப்பிக்க எந்த அவசரமும் இல்லை” என்று என்று குறிப்பிட்டார்.
அபிஷேக் சிங்வியோ, “உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும். அதை நேரடி ஒளிரப்பு செய்யவேண்டும்” என்று கோரினார்.
வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், மகாராஷ்டிர ஆளுநர் ஆட்சி அமைக்க உத்தரவிட்ட ஆவணங்களையும், தேவேந்திர பட்னவிஸ் தனக்கு ஆதரவளித்தோர் தொடர்பாக அளித்த ஆவணங்களையும் சமர்பிக்கக் கோரி மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி வழக்கை நாளை காலை 10.30க்கு ஒத்தி வைத்தனர்.
�,”