மகாராஷ்டிர முதல்வராக தேவேந்திர பட்னவிஸ், துணை முதல்வராக அஜித் பவார் ஆகியோருக்கு ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு நேற்று (நவம்பர் 24) விசாரணைக்குப் பின் இன்றைக்கு ஒத்தி வைக்கப்பட்டது. பட்னவிசை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்த கடிதம், ஆளுநருக்கு பெரும்பான்மை பற்றி அளிக்கப்பட்ட ஆதரவுக் கடிதங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று நேற்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது உச்ச நீதிமன்றம்.
அதன்படி இன்று (நவம்பர் 25) காலை 10.30 மணிக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் என்.வி. ரமணா, அசோக் பூஷன், சஞ்சீவ் கண்ணா ஆகியோர் முன் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
நேற்று மத்திய அரசுக்கும், பாஜகவுக்கும் முறைப்படி ஆஜராகாத வழக்கறிஞர்கள் சோலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, முகுல் ரோத்தகி ஆகியோர் இன்று முறைப்படி மத்திய அரசுக்காகவும், பட்னவிஸுக்காகவும் ஆஜரானார்கள்.
அப்போது சோலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தா, நேற்று உச்ச நீதிமன்றம் கேட்ட ஆளுநர் அழைப்பு விடுத்த கடிதம், ஆளுநருக்கு கொடுக்கப்பட்ட ஆதரவுக் கடிதங்கள் ஆகியவற்றை சீலிடப்பட்ட கவரில் நீதிபதிகளிடம் கொடுத்துவிட்டு, “நான் என் வாதத்தைத் தொடங்கு முன் மகாராஷ்டிர ஆளுநரின் பார்வையில் இருந்து ஒரு கேள்வியைக் கேட்க விரும்புகிறேன். இந்த நீதிமன்றம் ஆளுநரின் சுயேச்சையான அதிகாரத்தில் தலையிட விரும்புகிறதா என்பதை அறிந்துகொள்ள விரும்புகிறேன்” என்று கேட்டார்.
அப்போது நீதிபதிகள், “சிவசேனா-தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணி தங்களை ஆளுநர் ஆட்சி அமைக்க அழைக்குமாறு கோரிக்கை வைத்திருப்பதாக நாங்கள் கருதவில்லையே” என்று பதிலளித்தனர்.
அதன் பிறகு துஷார் மேத்தா தன் வாதத்தைத் தொடங்கினார். “அக்டோபர் 31 ஆம் தேதி கையெழுத்திட்டு சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் கொடுத்த ஆதரவுக் கடிதத்தையும், நவம்பர் 22 ஆம் தேதி தேசியவாத காங்கிரஸின் 54 எம்.எல்.ஏ.க்கள் கையெழுத்திட்டு பட்னவிஸுக்கு கொடுத்த ஆதரவுக் கடிதத்தையும் நீதிமன்றத்திடம் சமர்ப்பித்துள்ளேன். அஜித் பவார் ஆளுநருக்கு எழுதிய கடிதத்தில், மகாராஷ்டிராவில் நிலையான அரசு அமைவதற்காக தேவேந்திர பட்னவிசை ஆதரிப்பதாகவும், அவரது தலைமையிலான அரசில் இணைகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளதை ஆங்கிலத்தில் வாசித்துக் காட்டினார்.
மேலும் துஷார் மேத்தா, “தேர்தல் முடிவுகளுக்குப் பின் மாநிலத்தில் ஆட்சி அமைப்பதில் நிலவிய தேக்க நிலைமையை ஆளுநர் அறிந்திருந்தார். மகாராஷ்டிராவில் எந்தவொரு கட்சியும் அரசாங்கத்தை அமைக்கும் நிலையில் இல்லை என்று உறுதிசெய்த பின்னரே குடியரசுத் தலைவர் ஆட்சியை பரிந்துரைத்தார். சிவசேனா, பாஜக மற்றும் என்சிபி ஆகிய கட்சிகளுக்கும் ஆட்சி அமைக்க அவகாசம் கொடுத்து அவை தோல்வி அடைந்த பின்னரே குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரைத்தார் ஆளுநர்.
ஒவ்வொரு கட்சிக்கும் எத்தனை எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர் என்றெல்லாம் ஆளுநர் கணக்குப் போட்டுக் கொண்டிருக்க வேண்டிய தேவையில்லை. மனுதாரர்கள் கேட்பதற்கு ஒரே ஒரு உரிமை என்னவென்றால் உடனடியாக பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுங்கள் என்பதுதான்” என்று வாதாடினார் துஷார் மேத்தா.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி அசோக் பூஷன், “எம்.எல்.ஏ.கள் கையெழுத்திட்ட காகிதங்களில் இன்னாருக்கு ஆதரவு அளிக்கிறோம் என்று யார் பெயரும் குறிப்பிடப்படவில்லையே?” என்று கேட்டார்.
உடனே எழுந்த மகாராஷ்டிர பாஜகவின் வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, “அந்தக் கடிதத்துக்கு பல்வேறு இணைப்புகள் உள்ளன. அவற்றையும் படித்துப் பாருங்கள்” என்றார்.
அப்போது நீதிபதி சஞ்சீவ் கண்ணா, “இதுவரை இதேபோல உச்ச நீதிமன்றத்தில் நடந்த வழக்குகளில் 24 மணி நேரத்துக்குள் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பாலும் ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது” என்று குறிப்பிட்டார்.
அப்போது குறுக்கிட்ட சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “சிவசேனா- தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அமைத்துள்ள கூட்டணியை ஆளுநர் மேலும் சோதனை செய்ய விரும்பியிருக்கிறார். இந்நிலையில் நீதிமன்றம் ஆளுநருக்கு வழிகாட்டுதல்களை வழங்கினால் அது எதிர்காலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் இதுகுறித்து பதிலளிக்க மத்திய அரசுக்கு அவகாசம் வழங்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.
பாஜக சார்பில் ஆஜராகிய முகுல் ரோத்தகி, “நான் அஜித் பவாரை சந்தித்தேன். அவர் 54 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுக் கடிதத்தை ஆளுநரிடம் அளித்துள்ளார். அந்தக் கடிதத்தில் ஏதும் மோசடியில்லை. அதன்படி ஆளுநர் சரியாக செயல்பட்டிருக்கிறார். அவ்வளவுதான் இந்த வழக்கு முடிந்துவிட்டது” என்று வாதாடினார்.
”முதல்வர் பெரும்பான்மை ஆதரவைப் பெற்றிருக்கிறார் என்றால் அதை அவையில் நிரூபிப்பது பற்றி முடிவு செய்தாக வேண்டும்” என்று நீதிபதிகள் கூற, ரோத்தகி குறுக்கிட்டு, “ இப்போது கேள்வி என்னவென்றால் குறிப்பிட்ட காலத்துக்குள் பெரும்பான்மை நிரூபிக்கப்படவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட முடியுமா? அவையில் பெரும்பான்மை நிரூபிப்பதுதான் தீர்வு என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் 24 மணி நேரத்துக்குள் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என்று யார் கேட்பது? குறிப்பிட்ட கட்சியின் பயத்துக்காகவெல்லாம் கால நிர்ணயம் செய்யமுடியாது” என்று கூறினார்.
அப்போது மணிந்தர் சிங் என்ற வழக்கறிஞர் ஆஜராகி, “நான் அஜித் பவாரின் வழக்கறிஞர். நான் தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.களுக்கானவன். குழந்தைகளின் தாண்டிப் பாயும் ஆட்டத்தை உச்ச நீதிமன்றம் அனுமதிக்கக் கூடாது. முதலில் அவர்களை உயர் நீதிமன்றத்தை அணுகச் சொல்லுங்கள்” என்று வாதிட்டார்.
மேலும் வாதாடிய மத்திய அரசின் வழக்கறிஞர் துஷார், “ஆளுநரின் விருப்பப்படி அதிகாரத்தை நீதித்துறை மறுஆய்வு செய்ய முடியாது. இதுபோன்ற விஷயங்களில் சபாநாயகரின் அதிகாரத்தை ஐந்து நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் ஆராய வேண்டும். ஆனால் ஆளுநரின் நடவடிக்கைகளை நீதித்துறை மறுஆய்வு செய்ய வேண்டாம்” என்றும் உச்ச நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டார் மேத்தா.
மத்திய அரசு, பாஜகவின் வாதங்களுக்குப் பிறகு வாதத்தைத் தொடங்கினார் சிவசேனா கூட்டணியின் வழக்கறிஞரான கபில் சிபல்.
“அஜித் பவார் தனக்கு 54 என்.சி.பி. எம்.எல்.ஏ.க்கள் ஆதரவும் இருக்கிறது என்று கூறுகிறார். அப்படியென்றால் ஏன் உடனடியாக அவையில் பெரும்பான்மையை நிரூபிக்க அவர் தயங்குகிறார்? பதவிப் பிரமாணம் செய்து வைத்து 24 மணி நேரத்துக்குப் பிறகும் ஆளுநர், அவர்களை பெரும்பான்மையை நிரூபிக்கச் சொல்லாமல் ஏன் இன்னும் காத்துக் கொண்டிருக்கிறார்? குடியரசுத் தலைவர் ஆட்சியை அதிகாலை 5 மணிக்கு விலக்கும் அளவுக்கு நாட்டில் என்ன அவசர நிலையா பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது? எங்களிடம் சிவசேனா- தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு அளிக்கும் 154 எம்.எல்.ஏ.க்களின் ஒரிஜினல் அபிடவிட்டுகள் இருக்கின்றன. தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அஜித் பவாரை ஆதரிக்கவில்லை என்பதைத் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்” என்று குறிப்பிட்டார்.
காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் சார்பில் வாதாடிய அபிஷேக் சிங்வி, “ஒரே ஒரு என்.சி.பி. எம்.எல்.ஏ. கூட பாஜக கூட்டணிக்கு ஆதரவு அளிக்கவில்லை. அஜித் பவாரிடம் அதற்கான முறையான கடிதம் இல்லை. மோசடி செய்திருக்கிறார்கள். சட்டமன்றத் தலைவரை தேர்வு செய்த கையெழுத்துகளை வைத்து அந்தக் கடிதத்தை உருவாக்கியிருக்கிறார்கள். நாங்கள் பெரும்பான்மையை நிரூபிக்க தயாராக இருக்கிறோம்.பாஜக மட்டும்தான் தயங்குகிறது. உடனடியாக பெரும்பான்மையை நிரூபிக்க அவர்களுக்கு உத்தரவிடுங்கள்” என்று வாதாடினார்.
இதற்கிடையில் மத்திய அரசு சார்பில், “சபாநாயகர் தேர்வு முடிந்துதான் பெரும்பான்மை நிரூபிக்க முடியும்” என்று சொல்லப்பட்டிருக்கிறது.
வழக்கு விசாரணை முடிந்த நிலையில் தீர்ப்பை நாளை காலை ஒத்தி வைத்திருக்கிறது உச்ச நீதிமன்றம்.
�,”