மகாராஷ்டிரா: இறுதிகட்ட பேச்சுவார்த்தையில் புதிய கூட்டணி!

Published On:

| By Balaji

மகாராஷ்டிராவில் அரசாங்கம் அமைப்பது குறித்த நிச்சயமற்ற தன்மை முடிவடையவுள்ளது. மாநிலத்தில் சிவசேனா தலைமையிலான அரசாங்கத்தை ஆதரிப்பது குறித்து காங்கிரஸ் மற்றும் என்சிபி இன்று இறுதிகட்ட முடிவை எடுக்கவுள்ளன.

மகாராஷ்டிராவில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளை ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி ஆட்சி அமைக்க அழைப்புவிடுத்தும், மூன்று கட்சிகளால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை. இதையடுத்து, ஆளுநர் கோஷ்யாரி பரிந்துரையின் அடிப்படையில் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, புதிய கூட்டணி உருவாவது தொடர்பாக காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ்(என்சிபி) – சிவசேனா கட்சிகள் இடையே குறைந்தபட்ச பொது செயல் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, மகாராஷ்டிராவில் நிலவும் அரசியல் சூழல் குறித்தும், சிவசேனாவுடனான கூட்டணி குறித்தும் நவம்பர் 18 டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இல்லத்தில் என்சிபி தலைவர் சரத் பவார் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இப்பேச்சுவார்த்தையில், மகாராஷ்டிராவில் புதிய அரசாங்கம் உருவாகும் போது, இரண்டு துணை முதல்வர்கள் இருப்பார்கள் – என்.சி.பி மற்றும் காங்கிரஸில் இருந்து தலா ஒருவர். சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முழு ஐந்தாண்டு காலத்திற்கும் முதலமைச்சராக இருப்பார் என்பதும் முடிவாகியுள்ளது. சபாநாயகரை காங்கிரஸ் தேர்வு செய்யும் என முடிவானது.

அதனைத் தொடர்ந்து, அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகள் கடந்த 4 நாட்களாக நடைபெற்றுவந்தன. புதிய சட்டமன்றத்தில் மூன்று கட்சிகளின் வலிமைக்கு ஏற்ப 42 இலாகாக்கள் பகிரப்படும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சிவசேனா 288 உறுப்பினர்களைக் கொண்ட சபையில் 56 இடங்களைக் கொண்டுள்ளது, என்.சி.பி 54 இடங்களையும் மற்றும் காங்கிரஸ் 44 இடங்களையும் கொண்டுள்ளன.

நேற்று(நவம்பர் 21) இரவு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, அவரின் மகன் ஆதித்யா தாக்கரே இருவரும் என்சிபி தலைவர் சரத் பவாரை அவரின் இல்லத்தில் சென்று சந்தித்துப் பேசினார்கள்.

இந்தச் சந்திப்பு நள்ளிரவு வரை நடந்துள்ளது. அப்போது கூட்டணி தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் தான் விளக்கியுள்ளதாக சரத் பவார், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவிடம் தெரிவித்தார் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன.

சிவசேனா, என்சிபி, காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகள் சேர்ந்துள்ள இந்தக் கூட்டணிக்கு மகா விகாஸ் அகாதி (பெரும் வளர்ச்சிக் கூட்டணி) என்று பெயரிடப்பட்டுள்ளது. இன்று மும்பையில் நண்பகல் 12 மணிக்கு மேல் மூன்று கட்சிகளும் தனித்தனியாக தங்கள் எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்துகின்றன. அதன்பின், மாலை 4 மணிக்கு மேல் மூன்று கட்சிகளின் முக்கியத் தலைவர்களும் கூட்டணி தொடர்பாக ஆலோசனையில் ஈடுபடுகின்றனர்.

இதற்காக சிவசேனா கட்சி தங்களின் எம்எல்ஏக்கள் அனைவரையும் உரிய அடையாள அட்டையுடனும், 5 நாட்களுக்கு உரிய உடையுடனும் வர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இன்று காலை சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்திடம், செய்தியார்கள், முதல்வர் பதவி சரிசமமாகப் பிரித்துக்கொள்ள பாஜக தற்போது சம்மதம் தெரிவித்து சிவசேனாவை அணுகினால் உங்களின் நிலை எவ்வாறு இருக்கும் என்று கேட்டனர். அதற்கு சஞ்சய் ராவத் கூறுகையில், பாஜகவுக்கான காலக்கெடு முடிந்துவிட்டது. இனிமேல் இந்திரலோகத்தில், கடவுள் தேவேந்திரனின் அரியசானத்தை அளிக்கிறோம் என பாஜக கூறினாலும் அவர்களிடம் செல்லமாட்டோம்” எனத் தெரிவித்தார்.

காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ்-சிவசேனா ஆகிய மூன்று கட்சிகளைத் தவிர்த்து, சமாஜ்வாதி கட்சி, ஸ்வபிமானி சேத்கரி சங்கதனா, பிடபிள்யுபி கட்சி ஆகிய கட்சிகளும் கூட்டணியில் இணைய உள்ளன.

**காங்கிரஸ் ஆலோசனை துவங்கியது**

முதல்வராக உத்தவ் தாக்கரே முடிவானாலும், துணை முதல்வராக என்சிபி சார்பில் யார்? காங்கிரஸ் சார்பில் யார்? போன்றவை குறித்து ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. காங்கிரஸ் தரப்பில் அஷோக் சாவன், விஜய் தொராட் ஆகியோரில் ஒருவர் துணை முதல்வர் பதவிக்காக தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

விஜய் வதேட்டிவார், நசீம் கான், மணிகிராவ் தக்ரே, நிதின் ராவத், வர்ஷா கெய்க்வாட், ரஞ்சித் காம்ப்ளே மற்றும் சதேஜ் பாட்டீல் உள்ளிட்ட பல முன்னாள் அமைச்சர்களின் பெயர்கள் அமைச்சரவை பதவிகளில் உள்ளன.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share