�
பொன்னேரி அருகே ரயில் தண்டவாளத்தில் காந்த பேரிங் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பயணிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை எம்.ஜி.ஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து பினாகினி விரைவு ரயில் ஐதராபாத்திற்கு நேற்று( நவம்பர் 24) புறப்பட்டு சென்றது. அந்த ரயில் ஆயர்பாடி ரயில்வே மேம்பாலம் மீது சென்றுகொண்டிருந்தபோது திடீரென எஞ்சின் குலுங்குவது தெரிந்தது. இதனால் ரயில் ஓட்டுநர் அதிர்ச்சியடைந்து கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்தார். தொடர்ந்து கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் அந்த ரயில் நிறுத்தப்பட்டது.
தகவல் அறிந்த ரயில்வே பணிமனைப் பொறியாளர்கள் சென்னையில் இருந்து விரைந்து வந்தனர். ரயில் எஞ்சினை அவர்கள் ஆய்வு செய்ததில், அதன் சக்கரத்தில் காந்தம் ஒன்று சிக்கியிருப்பது கண்டிபிடிக்கப்பட்டது. இது குறித்து சென்னை கோட்ட ரயில்வே பாதுகாப்புத்துறை கண்காணிப்பாளர் மகேஸ்வரனுக்கு அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மகேஸ்வரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் இந்த மேக்னடிக் பேரிங்கை மர்ம நபர்கள் வைத்திருக்கலாம் என்று தெரியவந்தது.
இது குறித்து புலனாய்வுத்துறை அதிகாரிகள் தடயங்களைச் சேகரித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆயர்பாடி ரயில்வே மேம்பாலத்தில் மிகக் குறைந்த வேகத்தில் ரயில் இயக்கப்பட்டதால் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் பயணிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
�,