நாட்டு வெடிகுண்டு வெடித்து நாக்கு சேதமடைந்து மக்னா யானை மரணமடைந்தது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வனத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை வனப்பகுதியில் நாட்டு வெடி வைக்கப்பட்டிருந்த பழத்தை சாப்பிட்டபோது, வெடி வெடித்து காயமடைந்த மக்னா யானை, அப்பகுதியில் சுற்றித் திரிந்து வந்தது. யானையின் நாக்கு துண்டானதால் உணவுப்பொருட்களை சாப்பிட முடியமால் சிரமப்பட்டது. இந்த யானையை பிடித்து உரிய சிகிச்சை வழங்கும்படி தமிழக வனத்துறைக்கு உத்தரவிடக் கோரி கால்நடைகளுக்கான இந்திய மக்கள் அமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த மனுவில், ஏற்கனவே காயமடைந்த யானையை மேலும் காயப்படுத்தும் வகையில் பட்டாசு வெடித்து விரட்ட முயற்சித்த செயல் ஏற்றுகொள்ளத்தக்கதல்ல எனவும், யானைக்கு சிகிச்சை வழங்கும் முன்பே அது நீண்ட காலத்திற்கு உயிரோடு இருக்காது என வனத்துறை அதிகாரிகள் கூறியிருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. பட்டாசு வெடித்து அதை விரட்டிய வனத்துறையினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்த மனு இன்று நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் இன்று (அக்டோபர் 9) விசாரணைக்கு வந்த போது, வனத்துறை சார்பில் ஆஜரான சிறப்பு அரசு பிளீடர் விஜய் பிரசாந்த், “காயமடைந்த யானை, சிலிண்டர்கள் வைக்கப்பட்டிருந்த சிறப்பு அதிரடி படை போலீசாரின் குடியிருப்புக்குள் சென்றதாலேயே அதனை விரட்ட வேண்டிய கட்டாயத்திற்கு வனத்துறை தள்ளப்பட்டது. குடியிருப்புகள்,விவசாய நிலங்கள் இது போன்ற இடங்களில் யானைகள் உட்புகும் ஒவ்வொரு சூழலிலும் வனத்துறை வீரர்கள் உயிரை பணயம் வைத்து இதனை செய்து வருகின்றனர்” எனத் தெரிவித்தார்..
சம்பந்தப்பட்ட யானை செல்லும் பாதைகளில் வனத்துறை சார்பில் உணவுகள் வைக்கப்பட்ட போதும்,யானையின் நாக்கு துண்டிப்புக்கு உள்ளானதால் அதனால் உணவை உட்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டதாகவும்,காயப்பட்ட அந்த யானை நடந்தே கேரளாவிற்கு சென்றுவிட்ட நிலையில் அங்குள்ள வனத்துறையால் மீட்டு மயக்க மருந்து செலுத்தி சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் உணவு சாப்பிட முடியாததால் மரணமடைந்து விட்டதாகவும் எடுத்துரைத்தார்.
யானையே இறந்து விட்டதால் யானைக்கு சிகிச்சை அளிக்க வேண்டி தொடரப்பட்ட இந்த வழக்கின் கோரிக்கை செயலற்று விட்டதாக தெரிவித்த நீதிபதிகள், வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் நுழையும் யானைகளை விரட்ட என்ன வழிகாட்டி விதிமுறைகள் பின்பற்றப்படுகிறது என்பது தொடர்பாகவும், மக்னா யானை இறந்தது தொடர்பாகவும் அறிக்கை தாக்கல் செய்ய, வனத்துறைக்கு உத்தரவிட்டனர். வழக்கு விசாரணையை நவம்பர் மாதம் 6 ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
**எழில்**�,