சிட்டுக்குருவிக்காக வாகனத்தை விட்டுக்கொடுத்த குடும்பம்!

Published On:

| By Balaji

தற்போது சிட்டுக்குருவி இனம் அழிந்துவரும் நிலையில் மதுரையைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் சிட்டுக்குருவி கூடு கட்டியதற்காகக் கடந்த சில மாதங்களாகத் தங்களது ஸ்கூட்டியைப் பயன்படுத்தாமல் இருந்து வருகின்றனர்.

மதுரையில் உலகனேரி பகுதியைச் சேர்ந்தவர் அருண் சுவாமிநாதன். வழக்கறிஞராகப் பணியாற்றுகிறார். கொரோனா தொற்று பரவல் ஊரடங்கு காரணமாக இவர் தனது இருசக்கர வாகனத்தைப் பயன்படுத்தவில்லை. ஒரே இடத்தில் நிறுத்திவைத்திருந்தார். இந்த நிலையில் சிட்டுக்குருவி ஒன்று அதில் கூடு கட்டியதால் அந்த வாகனத்தைப் பயன்படுத்த எடுக்காமல் ஒரே இடத்தில் வைத்து சிட்டுக்குருவியைப் பாதுகாத்து வந்தனர் அவர் குடும்பத்தினர். மேலும், அவர் தனது தேவைக்காக, தன் வாகனத்தில் செல்லாமல் தொடர்ந்து தவிர்த்து வந்துள்ளார்.

தற்போது சிட்டுக்குருவி முட்டையிட்டு குஞ்சு பொரித்துள்ளது. சிட்டுக்குருவிகள் தானாகப் பறந்து செல்லும் வரை இருசக்கர வாகனத்தை அந்த இடத்தை விட்டு நகர்த்தப் போவதில்லை என்று அவர் மனைவி தெரிவித்துள்ளார். இதனால் சிறிது சிரமம் ஏற்பட்டபோதிலும் சிட்டுக்குருவியின் மகிழ்ச்சி தங்களுக்கு மிகப்பெரிய சந்தோஷத்தை அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

சிட்டுக்குருவி இனம் மெள்ள மெள்ள அழிந்து வரும் சூழ்நிலையில் நல்லெண்ணத்துடன் வழக்கறிஞர் குடும்பம் செயல்பட்டு வருவதற்கு அந்தப் பகுதியிலுள்ள அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

**ராஜ்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share