கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் ஒரு பகுதியாகக் குடிபோதை சோதனைக்கு மதுரையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் உலக நாடுகளைப் பெரிதும் பாதித்து வருகிறது. இந்த வைரஸ் தொற்றால் பல்வேறு நாடுகளிலும் இயல்பு நிலை பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பள்ளிகள் மூடல், பொது நிகழ்ச்சிகள் ரத்து, திருமணங்களுக்குக் கட்டுப்பாடு, சுற்றுலாத் தலங்கள் மூடல், வெளிநாடு மற்றும் மாநிலங்களுக்குச் செல்ல கட்டுப்பாடு, விமான நிலையங்களில் சோதனை. பல்கலைக்கழக தேர்வு ரத்து, வீட்டிலிருந்தே வேலை என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இதனால் மாணவர்கள், பொதுமக்கள், தொழில் துறையினர் எனப் பல தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் பொருட்டு குடிபோதை சோதனை மேற்கொள்ள மதுரையில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பணிபுரியும் போலீசார், போக்குவரத்து போலீசார் முகக் கவசம் அணிய வேண்டும் என்று சென்னை போக்குவரத்து காவல் துறை அறிவுறுத்தியிருந்தது. அதுபோன்று, தற்போது இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளிடையே மேற்கொள்ளப்படும் குடிபோதை சோதனைக்கு மதுரை ஆணையர் டேவிட்சன் தேவாசிர்வாதம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இருமல், தும்மல் ஆகியவற்றால் 20 சதவிகிதம் கொரோனா பரவுகிறது, அதைத் தவிர்த்து இருமுபவர்கள் பயன்படுத்தும் பொருளையோ, இடத்தையோ தொடுவதன் மூலம் 80 சதவிகிதம் பரவுகிறது என்று சுகாதாரத் துறை தரப்பில் கூறப்படும் நிலையில் மதுபோதை சோதனை கருவியைக் கொண்டு சோதனை செய்ய வேண்டாம் என்று மதுரை காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த சோதனை மூலம் கொரோனா பரவ வாய்ப்பு ஏற்படலாம். எனவே இதற்குத் தடை விதிக்கப்படுகிறது, இது பாதுகாப்பு நடவடிக்கை என்று காவல்துறையினர் கூறுகிறார்கள்.
இந்த அறிவிப்பு குடிமகன்களிடையே கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
**கவிபிரியா**�,