மதுரை சித்திரை திருவிழாவில் முத்திரை பதிக்கும் நிகழ்ச்சியாக மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று நடந்தது. வெளிநாடுகளில் இருந்து வரவழைத்த பூக்களால் மணமேடைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்நிலையில் இன்று காலை சித்திரை திருவிழாவில் முத்திரை பதிக்கும் நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோவிலில் உள்ள வடக்கு-மேற்கு ஆடி வீதியில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது. மீனாட்சி அம்மனுக்கு பூண் பூட்டும் போது வானில் இருந்து வண்ண மலர்கள் கொட்டும் வகையில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதையொட்டி இன்று அதிகாலை 4 மணி அளவில் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளி சித்திரை வீதிகளை வலம் வந்தனர். பின்னர் சுவாமி முத்துராமய்யர் மண்டபத்தில் கன்னி ஊஞ்சலாகி திருக்கல்யாண மணமேடையில் எழுந்தருள்வார்.
காலை 10.35 மணிக்கு மேல் 10.59 மணிக்குள் மிதுன லக்னத்தில் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடந்தது. திருக்கல்யாணம் முடிந்தபின் அம்மனும், சுவாமியும் திருக்கல்யாண கோலத்தில் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்கள். இரவு 7.30 மணிக்கு சுந்தரேசுவரர் யானை வாகனத்திலும், மீனாட்சி அம்மன் ஆனந்தராயர் பூப்பல்லக்கிலும் எழுந்தருளி நான்கு மாசி வீதிகளை வலம் வருவார்கள்.
மேலும் மீனாட்சி திருக்கல்யாணத்திற்கு வரும் பக்தர்களுக்கு தனியார் பக்தர்கள் சபை சார்பில் சேதுபதி பள்ளியில் திருக்கல்யாண விருந்து வழங்கப்படுகிறது.
.