மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு, பிராமணர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும் என்று வெளியிடப்பட்ட அறிவிப்பாணை திரும்ப பெறப்பட்டதாக இந்து அறநிலையத் துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கம் சார்பாக ரெங்கநாதன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அதில், திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோயிலில் சமையல் பணியாளர் மற்றும் நைவேத்திய பணியிடங்களுக்கு பிராமணர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும் என இந்து அறநிலையத்துறை கடந்த ஜனவரி 12 ஆம் தேதி அறிவிப்பாணை வெளியிடப்பட்டது.
தமிழகத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தில் அர்ச்சகர் பயிற்சி முடித்த பிராமணர் அல்லாத நான் உட்பட 203 பேர் 14 ஆண்டுகளாக அர்ச்சகர் பணிக்காகக் காத்திருக்கிறோம். மேலும், கோயில் பணி நியமனங்களில் பிராமணரல்லாதோருக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக நாங்கள் போராடி வருகிறோம். இந்த நிலையில், இந்து அறநிலையத் துறை வெளியிட்ட அறிவிப்பாணையில், பிராமணர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருப்பது சட்ட விதிகளுக்கு முரணானது. அதனால், இந்த அறிவிப்புக்குத் தடை விதிக்க வேண்டும்” எனக் கூறியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நேற்று (மார்ச் 13) நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வந்தது. அப்போது, இந்து அறநிலையத் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அறநிலையத்துறை சார்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பாணை உடனடியாகத் திரும்பப் பெறப்பட்டுவிட்டது எனத் தெரிவித்துள்ளார்.
இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுவிட்டதால், வழக்கை முடித்து வைத்தனர்.
**வினிதா**
�,”