zமுருகன் -நளினி வீடியோ கால்: நீதிமன்றம் கேள்வி!

Published On:

| By Balaji

வாட்ஸ் அப்பில் வீடியோ கால் மூலம் உறவினர்களுடன் பேச முருகனுக்கும் நளினிக்கும் அனுமதி அளிப்பதில் என்ன பிரச்சினை என்று தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக 28 ஆண்டுகளாக நளினி மற்றும் முருகன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் இறுதியில், முருகனின் தந்தை இலங்கையில் உயிரிழந்த போது இறுதிச்சடங்கை வீடியோ காலில் பார்க்க அனுமதிக்க வேண்டுமென்று தமிழக அரசிடமும் சிறை நிர்வாகத்திடமும் முருகன் நளினி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது . ஆனால் இந்தக் கோரிக்கையை அரசு நிராகரித்தது.

இதனிடையே சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினியின் தாயார் பத்மா ஆட்கொணர்வு வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில் முருகன் நளினி இருவரும் இலங்கையிலுள்ள

முருகனின் தாயார் சோமணி அம்மாளிடம் தினமும் 10 நிமிடம் வாட்ஸ்அப் வீடியோ காலில் பேச அனுமதி அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

மேலும் லண்டனில் உள்ள முருகனின் தங்கையுடன் பேச அனுமதிக்க வேண்டும் என்றும் முருகனின் தந்தையின் இறுதிச்சடங்கை வீடியோ காலில் பார்க்க அனுமதிக்காதது குறித்தும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், இம்மனு குறித்துப் பதிலளிக்க ஒரு வார கால அவகாசம் கேட்கப்பட்டது.

அதற்கு நீதிபதிகள்,தாயார்-சகோதரியுடன் முருகன், நளினியை வீடியோ கால் மூலம் பேச அனுமதிப்பதில் என்ன பிரச்சினை உள்ளது என்று கேள்வி எழுப்பி இந்த மனுவுக்கு நாளை மறுநாள் பதில் அளிக்கத் தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து வெளியாட்கள் சிறைக்குள் அனுமதிக்கப்படுவதில்லை என்பதால் கைதிகள் வீடியோ கால் மூலம் குடும்பத்தினரிடம் பேச அனுமதிக்கப்படுகின்றனர். 9 மத்தியச் சிறைகளிலும், 6 பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகள் தங்கள் குடும்பத்தினருடன் பேச 4ஜி சிம்முடன் 58 ஸ்மார்ட்போன்கள் சிறை நிர்வாகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதுவரை 74,467 கைதிகள் தங்களது குடும்பத்தினருடன் பேச அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் நளினி, முருகனுக்கு வீடியோ கால் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

**-கவிபிரியா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share