சீன அதிபர் வருகை: மாமல்லபுரத்தில் செல்போன் டவர்களும் அகற்றம்?

Published On:

| By Balaji

பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜிங்பிங்கும் அடுத்த மாதம் 11- ஆம் தேதி சென்னையை அடுத்துள்ள சுற்றுலாத் தலமான மாமல்லபுரத்துக்கு வருகிறார்கள். அங்கே இரு நாட்டுத் தலைவர்களின் சந்திப்பு நடைபெற இருப்பதை ஒட்டி, சீன பாதுகாப்பு உளவுத் துறையினர் ஏற்கனவே மாமல்லபுரம் வந்து சீன அதிபருக்கான பாதுகாப்பு பற்றி அங்குலம் அங்குலமாக ஆராய்ந்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.

அவர்களின் அறிவுறுத்தலின்பேரில் நமது நாட்டு உளவுத்துறையும், பாதுகாப்புப் படையினரும் மாமல்லபுரத்தில் கடுமையான சோதனைகளை மேற்கொண்டு வருகிறார்கள். முழுக்க முழுக்க போலீஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட மாமல்லபுரத்தில், இதுவரை எந்தத் தலைவர்களின் வருகையின்போதும் செய்யப்படாத பாதுகாப்பு கெடுபிடிகள் செய்யப்படுவதாக பொதுமக்கள் குமுறுகிறார்கள்.

“கடந்த வருடம் நமது பிரதமர் மோடி மாமல்லபுரம் அருகே உள்ள திருவிடந்தை அருகே ராணுவக் கண்காட்சியைத் துவக்கி வைக்க வருகை தந்தார். அப்போது கூட செல்போன்களை செயலிழக்கச் செய்யும் வகையில் ஜாமர்கள் மட்டுமே செயல்படுத்தப்பட்டன.

ஆனால் இந்த முறை சீன அதிபரோடு வருகை தருவதாலோ என்னவோ மாமல்லபுரத்தில் இருக்கும் செல்போன் டவர்களையே அகற்றுமாறு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கெடுபிடி காட்டப்படுகிறது. இது அதிர்ச்சி அளிக்கத் தக்க வகையில் இருக்கிறது.

’மாமல்லபுரம் சிறப்பு நிலை பேரூராட்சிக்கு மிக மிக முக்கியத் தலைவர்கள் வருகை தருவதை முன்னிட்டு காஞ்சி மாவட்ட ஆட்சித் தலைவர், உயர் அலுவலர்களால் தல ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேற்கண்ட ஆய்வில், தங்களுக்கு சொந்தமான இடத்தில் செல்போன் டவர் அமைக்கப்பட்டுள்ளதை ஆய்வு செய்யப்பட்டது. இரண்டு தினங்களுக்குள் டவரை அகற்றுமாறு தெரிவிக்கப்படுகிறது. தவறும் பட்சத்தில் பேரூராட்சி நிர்வாகமே அகற்றிவிட்டு அதற்கான செலவை தங்களிடம் வசூல் செய்யப்படும்’ என்று செல்போன் டவருக்காக இடத்தை வாடகைக்கு விட்டிருக்கும் வீட்டு சொந்தக்காரர்களுக்கு மாமல்லபுரம் பேரூராட்சி செப்டம்பர் 23 ஆம் தேதி நோட்டீஸ் விட்டிருக்கிறது.

இது மாமல்லபுரம் மக்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது என்கிறார்கள். இரு தலைவர்களும் ஹெலிகாப்டரில் வருவதை ஒட்டி இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகத் தெரிகிறது.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share