நாளை தேர்தல்: இன்றுவரை தொடரும் சிவசேனா-பாஜக மோதல்!

Published On:

| By Balaji

பாஜகவும் சிவசேனாவும் கூட்டணி அமைத்து மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றன. நாளை (அக்டோபர் 21) தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் இன்று வரை சிவசேனாவுக்கும் பாஜகவுக்குமான மோதல் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றோடு முடிந்த நிலையில் இன்று (அக்டோபர் 20) வெளிவந்த சிவசேனாவின் அதிகாரபூர்வ ஏடான சாம்னாவில், சிவசேனாவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ரவூத் ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.

அதில், “மகாராஷ்டிராவின் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தேர்தல் பிரச்சாரங்களில் எல்லாம், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை’ என்று பேசினார். அப்படி பாஜக அரசுக்கு எதிரிகளே இல்லாத ஒரு மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தலுக்காக பிரதமர் மோடி எதற்காக 10 முறை பேரணிகள் நடத்த வேண்டும்? பாஜக தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷா எதற்காக முப்பது முறை வந்து பேரணி நடத்த வேண்டும்? எதிரிகளே இல்லாத மாநிலத்தில் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் நூற்றுக்கணக்கான முறை ஏன் பேரணிகள் நடத்த வேண்டும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார் சிவசேனாவின் தலைவர்.

மேலும் அந்தக் கட்டுரையில் அவர், “முதல்வர் பட்னவிஸ் எதிரிகளே இல்லை என்று சொன்னால் கூட, உண்மையிலேயே அவருக்கு தேர்தல் சவாலானதாகவே இருக்கிறது. அதனால்தான் பிரதமர், உள்துறை அமைச்சர் எல்லாம் இவ்வளவு முறை பிரச்சாரத்துக்கு வந்திருக்கிறார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதே கேள்வியை பாஜக-சிவசேனா கூட்டணியை எதிர்த்து நிற்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவரான சரத் பவாரும் எழுப்பியுள்ளார். அதையும் தன் கட்டுரையில் குறிப்பிட்டுள்ள சிவசேனா தலைவர் ரவூத், ‘சரத்பவார் எழுப்பியது சரியான வினா’ என்று கூறியுள்ளார்.

இந்தத் தேர்தலில் முதன் முறையாக பால் தாக்கரே குடும்பத்தில் இருந்து முதல் முறையாக யுவ சிவசேனா தலைவரும், உத்தவ் தாக்கரேவின் மகனுமான ஆதித்ய தாக்கரே வொர்லி தொகுதியில் களமிறங்குகிறார்.

இதுபற்றி சாம்னா கட்டுரையில், “ஆதித்ய தாக்கரே இந்தத் தேர்தலில் போட்டியிடுவது என்பது சட்டமன்றத்தில் உட்கார்ந்துவிட்டு வருவதற்கல்ல. இளைய தலைமுறையினர் மகாராஷ்டிராவை ஆதித்ய தாக்கரேதான் ஆளவேண்டும் என்று விரும்புகிறார்கள்” என்று குறிப்பிட்டுள்ளது சிவசேனா கட்சி.

மேலும், “இரு கட்சிகளிலுமே போட்டி வேட்பாளர்களும் களமிறங்கியிருக்கிறார்கள். முதலில் சிவசேனாவும், பாஜகவும் தனித்தனியாக போட்டியிட்டத் திட்டமிட்டன. பின் கூட்டணி அமைத்ததால் சில தொகுதிகளில் வாய்ப்புகிடைக்காதவர்கள் தனியாக போட்டியிடுகின்றனர். அவர்களை நான் போட்டி வேட்பாளர் என்று அழைக்கமாட்டேன்” என்றும் சிவசேனா தலைவர் ரவூத் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் பணிகள் ஆரம்பித்ததில் இருந்தே கூட்டணிக் கட்சிகளான சிவசேனாவும்-பாஜகவும் ஒன்றையொன்று தாக்கிக் கொண்டே வந்திருக்கின்றன. அந்த வகையில் விடிந்தால் தேர்தல் என்ற நிலையிலும் கூட பாஜக-சிவசேனா மோதல் ஓயவில்லை.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share