Mவேளாண் ஏற்றுமதி: அரசு ஆலோசனை!

Published On:

| By Balaji

விரைவில் அமல்படுத்தப்படவுள்ள புதிய வேளாண் ஏற்றுமதிக் கொள்கை மற்றும் தொழில் துறைக் கொள்கைகள் குறித்து அதிகாரிகளுடன் மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சரான சுரேஷ் பிரபு ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்ற வாரம் சுதந்திர தின விழா உரையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, 2022ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்கும் வகையில் புதிய வேளாண் கொள்கை ஒன்று தயாராகி வருவதாகவும், விரைவில் அமல்படுத்தப்படும் எனவும் கூறியிருந்தார். அது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சரான சுரேஷ் பிரபு தலைமையில் நேற்று (ஆகஸ்ட் 20) நடைபெற்றுள்ளது. இந்தியாவின் ஏற்றுமதியை மேம்படுத்துவதற்கான பல்வேறு அம்சங்களை இந்தக் கூட்டத்தில் விவாதித்ததாகவும், புதிய வேளாண் ஏற்றுமதி மற்றும் தொழில் துறை கொள்கைகள் குறித்து ஆலோசித்ததாகவும், சுரேஷ் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

வேளாண் ஏற்றுமதிக்கான இப்புதிய கொள்கை சென்ற மார்ச் மாதத்தில் வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சகத்தால் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்கவும், சர்வதேச மதிப்புச் சங்கிலியில் இந்திய வேளாண் பொருட்களையும் இந்திய விவசாயிகளையும் ஒருங்கிணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல, தொழில் துறையில் 1991ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட கொள்கைக்குப் பதிலாக புதிய கொள்கை ஒன்றும் அமலாக உள்ளது. இக்கொள்கையின் மூலம் தொழில் துறையில் உள்ள பரிவர்த்தனைப் பிரச்சினைகள் தீரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இத்துறையில் ரோபோட்டிக்ஸ் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்ப அம்சங்கள் ஊக்குவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share