2017-18 நிதியாண்டில் 1.6 லட்சம் பயணிகள் கப்பல்கள் வாயிலாக இந்தியாவுக்கு வருகை புரிந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஜனவரி 7ஆம் தேதி இதுகுறித்து மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு மத்திய சுற்றுலாத் துறை இணையமைச்சரான கே.ஜே.அல்போன்ஸ் அளித்துள்ள பதிலில், ”2017-18ஆம் ஆண்டில் 139 சொகுசுக் கப்பல்கள் மூலம் இந்தியாவின் ஆறு முக்கிய துறைமுகங்களான சென்னை, மும்பை, மர்மகோவா, நியூ மங்களூர், கொச்சின் மற்றும் கொல்கத்தா துறைமுகங்களுக்கு 1,62,660 பயணிகள் வருகை புரிந்தனர். இந்தியாவை சொகுசுக் கப்பல்கள் வந்துசெல்லும் வசதியுடைய நாடாக உருவாக்கும் வகையில் தொலைநோக்கு ஆவணம் ஒன்றை மத்திய கப்பல் அமைச்சகம் உருவாக்கியுள்ளது.
இதன் மூலம் துறைமுகங்களில் சுற்றுலா சொகுசுக் கப்பல்களுக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள், உள்நாட்டுக் கப்பல் தொழில் வளர்ச்சிக் கொள்கைகளுக்கான ஆதரவு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. கப்பல் அமைச்சகமும், சுற்றுலா அமைச்சகமும் இணைந்து இந்தியாவில் சொகுசுக் கப்பல் சுற்றுலா மேம்பாட்டுக்கான செயல் திட்ட ஆலோசகரை நியமித்துள்ளது” என்று கூறினார்.
இந்தியா வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது போலவே, சொகுசு கப்பல்கள் வாயிலாக வெளிநாடுகளுக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொள்ளும் இந்தியர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. உலக சுற்றுலா அமைப்பின் அறிக்கையின் படி, 2020ஆம் ஆண்டுக்குள் சுமார் 3 லட்சம் இந்தியர்கள் சர்வதேச சொகுசுக் கப்பல்களில் விடுமுறைக் கால பயணங்களை மேற்கொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.�,