ஒரு மாதத்தில் 50 லட்சம் விமானப் பயணிகளுக்குச் சேவை வழங்கிய முதல் இந்திய விமான நிறுவனம் என்ற சாதனையை இண்டிகோ படைத்துள்ளது.
196 விமானங்களைக் கொண்டு இந்தியாவில் விமானப் போக்குவரத்துச் சேவைகளை வழங்கிவரும் இண்டிகோ நிறுவனம் சென்ற அக்டோபர் மாதத்தில் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகளுக்குச் சேவை வழங்கியுள்ளது. உள்நாட்டு விமானப் போக்குவரத்துச் சேவையில் இச்சாதனை நிகழ்த்தும் முதல் இந்திய நிறுவனம் இண்டிகோதான். ஒட்டுமொத்தமாக, அக்டோபர் மாதத்தில் மொத்தம் 1.18 கோடிப் பேர் உள்நாட்டு விமானப் பயணங்களை மேற்கொண்டுள்ளனர். இது 2017ஆம் ஆண்டின் அக்டோபர் மாதம் பயணம் செய்த 1.04 கோடிப் பயணிகளை விட 13.5 சதவிகிதம் கூடுதலாகும்.
நடப்பு ஆண்டின் ஜனவரி முதல் அக்டோபர் வரையில் மொத்தம் 11.5 கோடிப் பேர் உள்நாட்டு விமானப் பயணங்களை மேற்கொண்டுள்ளனர். 2017 அக்டோபரில் இந்த எண்ணிக்கை 9.5 கோடியாக மட்டுமே இருந்தது. விமானச் சந்தையில் இண்டிகோ நிறுவனம் 42.8 சதவிகிதப் பங்குகளுடன் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகிறது. 14.9 சதவிகிதப் பங்குகளுடன் ஜெட் ஏர்வேஸ் இரண்டாம் இடத்திலும், 12.2 சதவிகிதப் பங்குகளுடன் ஏர் இந்தியா மூன்றாம் இடத்திலும் இருக்கின்றன. அதிக இருக்கைகள் நிரப்பப்பட்ட விமான நிறுவனமாக ஸ்பைஸ்ஜெட் (90.8%) முதலிடத்தில் இருக்கிறது. 78.8 சதவிகித சந்தைப் பங்குடன் ஏர் இந்தியா கடைசி இடத்தில் இருக்கிறது. இந்த விவரங்களை பொது சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.�,