Mவிதிகளும் விதிவிலக்குகளும்!

Published On:

| By Balaji

ஒரு சொல் கேளீரோ! – 19: அரவிந்தன்

ஒற்று விஷயத்தில் மேலும் சில முக்கியமாக விதிகள், பொதுவாக நிகழக்கூடிய பிழைகள், விதிவிலக்குகள் ஆகியவற்றைப் பார்க்கலாம்.

ஏகாரம் ஓகாரம் ஆகிய ஒலிகளில் முடியும் சொற்களுக்குப் பின்னால் ஒற்று மிகாது.

எடுத்துக்காட்டு:

எங்கோ போனான்

அங்கே பார்த்தாள்

அவனே தந்தான்

அதோ போகிறது

இப்படி ஓ, ஏ ஆகிய ஒலிகளில் முடியும் எந்தச் சொல்லுக்கும் ஒற்று வராது.

**ஒலி மயக்கம்**

அதைக் கொண்டுவா

அவனைக் கூப்பிடு

அவற்றைப் பார்

இதுபோன்ற தொடர்களில் கட்டாயம் ஒற்று மிகும். சிலர் இதிலுள்ள ஓசையை மட்டும் எடுத்துக்கொண்டு இதேபோன்ற ஓசை வரும் பிற சொற்களுக்கும் ஒற்று போட்டுவிடுகிறார்கள். இந்தத் தவறுக்கான சில எடுத்துக்காட்டுகளைப் பார்ப்போம்:

மாத்திரைத் தா

குதிரைக் கனைத்தது

அத்தைக் கூப்பிட்டார்.

மருத்துவமனைப் பார்

இவை எல்லாமே தவறுகள்தாம். ஆனால், பலரும் இந்தத் தவறுகளைச் செய்கிறார்கள். ஏன் செய்கிறார்கள்?

அதை, இதை, அவரை, இவரை, அவளை, அவனை போன்ற சொற்களுக்குப் பின்னால் ஒற்று மிகும். இதைக் கவனிக்கும் சிலர், ஐகாரத்தில் (ஐ என்னும் ஓசையில்) முடியும் சொற்களுக்கு ஒற்று போட்டுவிடுகிறார்கள்.

ஐகாரத்தில் முடியும் அதை, இதை முதலான சொற்களைச் சற்றுக் கூர்ந்து கவனித்தால் இந்தப் பிழை நேராது.

அது + ஐ = அதை

அவர் + ஐ = அவரை

அது என்பது அதை ஆகவும் அவர் என்பது அவரை ஆகவும் மாறுவதால் அங்கே ஒற்று பயன்படுத்தப்படுகிறது. அதைக் கொண்டுவா, அவரைக் கூப்பிடு என்று ஒற்று பயன்படுத்தி எழுதுகிறோம்.

மாத்திரை என்பது மாத்திர் + ஐ அல்ல. மாத்திரை என்பதுதான் அந்தச் சொல்லின் முழு வடிவம். எந்த எழுத்தும் கூடுதலாகச் சேர்ந்து அது அந்த வடிவத்தைப் பெறவில்லை. எனவே மாத்திரை என்பதை அவனை என்பதுபோல எடுத்துக்கொள்ளக் கூடாது.

குதிரை, அத்தை, மருத்துவமனை ஆகிய சொற்களை குதிர் + ஐ, அத் + ஐ, மருத்துவமன் + ஐ என்றெல்லாம் பிரிக்க முடியாது அல்லவா?

அவனை, அதை, அவர்களை, உரலை ஆகிய சொற்களை அவன் +ஐ, அது + ஐ, அவர்கள் + ஐ, உரல் + ஐ எனப் பிரிக்க முடியும்.

எனவே, இவை இரண்டும் ஒன்றல்ல. இதைப் புரிந்துகொண்டால் தேவையற்ற ஒற்றுகளைத் தவிர்த்துவிடலாம்.

பார்த்துக்கொள்

கேட்டுச் சொல்

எடுத்துக் கொடு

இந்த மூன்று தொடர்களிலும் முதல் சொல் (நிலை மொழி) உ என்னும் ஒலியில் முடிகிறது.

அது, இது, பாட்டு, மாடு என ‘உ’ என்னும் ஒலியில் முடியும் சொற்களை இவற்றைப் போலக் கருதி ஒற்று போடக் கூடாது.

பார் என்பது பார்த்து என மாறுகிறது.

கேள் என்பது கேட்டு என மாறுகிறது.

எடு என்பது எடுத்து என மாறுகிறது.

மாடு, பாட்டு, பல்லக்கு ஆகியவை எதன் சேர்க்கையும் இல்லாமல் ‘உ’ என்னும் ஒலியில் முடிகின்றன.

முதல் ரகத்தில் உள்ள சொற்கள் ஒரு சொல்லுடன் வேறொரு கூறு இணைவதால் உருவாகின்றன.

இரண்டாவது ரகத்தில் உள்ள சொற்களில் அப்படி எந்தக் கலவையோ இணைப்போ ஏற்படவில்லை. அவை தம்மளவிலேயே அவன், மண், போர் என்பதுபோலத் தனிச் சொல்லாக உள்ளன.

கவனத்தில் கொள்க:

தனிச் சொல்லுடன் ஐ, ஆல், ஓடு, உடன், க்கு முதலான வேற்றுமை உருபுகள் சேர்ந்தால் ஒற்று போட வேண்டும்.

தனிச் சொல்லே ஐ, உ, ஆல் முதலான ஓசைகளில் முடிந்தால் அவற்றை இப்படிக் கையாளக் கூடாது.

**விதிவிலக்குகள்**

திரைப்படங்கள், மனிதர்கள், அமைப்புகள் ஆகிய பெயர்களை எழுதும்போது, இவற்றோடு சம்பந்தப்பட்டவர்கள் எப்படி எழுதுகிறார்களோ அப்படியே எழுத வேண்டும். அங்கே நமது இலக்கண அறிவைக் காட்டக் கூடாது.

எடுத்துக்காட்டு:

கல்யாண பரிசு என்பதைக் கல்யாணப் பரிசு என்று எழுதுவதே சரி. ஆனால் இந்தத் திரைப்படத்தை எடுத்தவர்கள் ஒற்று பயன்படுத்தவில்லை. இந்தப் படத்தின் தலைப்பை எழுதும்போது நாமும் பயன்படுத்தக் கூடாது.

இதய கோயில், மின்சார கண்ணா ஆகிய படங்களுக்கும் இது பொருந்தும். இந்தப் படங்களைப் பற்றி எழுதும்போது இதயக் கோயில், மின்சாரக் கண்ணா என ஒற்று பயன்படுத்தி எழுதக் கூடாது.

ரவிக்குமார், செல்வகுமார், முத்துக்குமார் ஆகிய பெயர்களை அந்த நபர்கள் எப்படி எழுதுகிறார்களோ அப்படியே எழுத வேண்டும்.

லெனின் தொழிலாளர் நல பேரவை என்று ஓர் அமைப்பின் பெயர் இருக்கலாம். நலப் பேரவை என்பதுதான் சரி. ஆனால், அவர்களுடைய அதிகாரபூர்வ ஆவணங்களிலும் நல பேரவை என ஒற்று இல்லாமல் எழுதப்பட்டிருந்தால் நாம் அதை மாற்ற வேண்டியதில்லை.

**கவனத்தில் கொள்க:**

எங்கே ஒற்று மிகும், எங்கே மிகாது என்பதற்கான விதிகள் தமிழ் இலக்கணத்தில் தெளிவாக உள்ளன. பெயரெச்சம், வினையெச்சம், ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம், உருபும் பயனும் உடன் தொக்க தொகை, மென்தொடர்க் குற்றியலுகரம், வன்தொடர்க் குற்றியலுகரம் எனப் பலப் பல விதிகள் உள்ளன. அந்த விதிகளில் எதுவும் இங்கே குறிப்பிடப்படவில்லை. காரணம், இது இலக்கண நூல் அல்ல. இங்கே நாம் இலக்கணம் பாடமும் நடத்தவில்லை.

ஒற்று என்பதற்கான விதிகள் விரிவானவை. நுட்பமானவை. இவற்றை முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டுமானால் இலக்கண நூல்களையும் ஆசிரியர்களையும் நாட வேண்டும். இங்கே தந்திருப்பதெல்லாம் அடிக்கடி நாம் எதிர்கொள்ளக் கூடிய சில எடுத்துக்காட்டுகள் மட்டுமே. இவற்றை அடிப்படையாகக் கொண்டு ‘ஒற்று’ நுட்பங்களைக் கற்க நாம் முயல வேண்டும்.

[ஒற்றுத் தலைவலி!](https://minnambalam.com/k/2019/06/12/7)

**

மேலும் படிக்க

**

**[டிஜிட்டல் திண்ணை: எடப்பாடியை டென்ஷன் ஆக்கிய தினகரன்- வாய்ப்பூட்டு பின்னணி!](https://minnambalam.com/k/2019/06/13/76)**

**[அதிமுக: அந்த 11 பேர் குழுவில் யார் யார்?](https://minnambalam.com/k/2019/06/13/22)**

**[பாக்கியராஜ் அணிக்கு விஜயகாந்த் ஆதரவு!](https://minnambalam.com/k/2019/06/13/44)**

**[ரோஜாவுக்கு முக்கிய அரசு பதவி!](https://minnambalam.com/k/2019/06/13/11)**

**[பாஜக அழைப்பு: அலைபாயும் ஜி.கே.வாசன்](https://minnambalam.com/k/2019/06/12/20)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share