�
கடந்த மூன்று மாதங்களாக சரிவில் இருந்த சேவைத்துறை தற்போது வளர்ச்சிப் பாதைக்கு திரும்பியுள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.
கடந்த நவம்பர் மாதம் அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டு மதிப்பழிப்பு நடவடிக்கை காரணமாக நாட்டின் உற்பத்தித்துறை மட்டுமல்லாது, சேவைத்துறையும் பாதிப்புக்கு உள்ளானது. அஞ்சல், போக்குவரத்து, ஓட்டல், சுற்றுலா உள்ளிட்ட துறைகள் சேவைத்துறைகளாகும். இவை நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியில், முக்கிய பங்கு வகிக்கின்றன. தொடர்ந்து கடந்த 3 மாதங்களாகவே சரிவுடன் இருந்த சேவைத்துறை வர்த்தகப் பணிகள், தற்போது மீண்டும் வளர்ச்சிக்கு வந்துள்ளதாக நிக்கி மார்க்கிட் சர்வீசஸ் நிறுவனத்தின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக நிக்கி மார்க்கிட் சர்வீசஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், ‘ஜனவரி மாதத்திற்கான பி.எம்.ஐ. குறியீடு 48.7 ஆகக் குறைந்திருந்தது. காரணம், பண மதிப்பழிப்பு நடவடிக்கை; அதனால் உருவான பண நெருக்கடி. எனவே அப்போது உற்பத்தி மட்டுமின்றி சேவைத்துறை நிறுவனங்களின் வர்த்தகமும் முடங்கியிருந்தது. பல நிறுவனங்கள் ஆட்குறைப்பையும் மேற்கொண்டன. ஆனால், தற்போது மீண்டும் இந்நிறுவனங்களின் வர்த்தகம் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. வெளிநாடுகளில் இருந்து அதிகளவு ஏற்றுமதி பணி ஒப்பந்தங்களும் கிடைக்கத் தொடங்கியுள்ளன. அதன்படி தற்போது பிப்ரவரி மாதத்திற்கான சேவைத்துறை பி.எம்.ஐ. குறியீடு 50.3 புள்ளிகளாக அதிகரித்துள்ளது. மேலும் இனி வரும் நாட்களிலும் இந்த வளர்ச்சி தொடரும்’ என்று தெரிவித்துள்ளது.�,