வங்கதேசத்துக்கு எதிரான இன்றைய போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 314 ரன்கள் எடுத்துள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 40ஆவது ஆட்டத்தில் இன்று வங்கதேச அணியை எதிர்த்து இந்தியா விளையாடி வருகிறது. இந்திய அணியில் சென்ற போட்டியில் சொதப்பிய கேதார் ஜாதவுக்குப் பதிலாக தினேஷ் கார்த்திக் அணியில் சேர்க்கப்பட்டார். டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தார். துவக்க வீரர்களாக லோகேஷ் ராகுலும் ரோஹித் ஷர்மாவும் களமிறங்கினர். ஒருபுறம் ராகுல் நிதானமாக விளையாட, மறுபுறம் ரோஹித் ஷர்மா அதிரடி காட்டினார்.
இந்த ஜோடி 18ஆவது ஓவரிலேயே 100 ரன்களைக் கடந்தது. அதிரடியாக விளையாடிய ரோஹித் ஷர்மா இந்த உலகக் கோப்பையில் தனது நான்காவது சதத்தைப் பூர்த்தி செய்தார். சதமடித்த கையோடு சௌமியா சர்கார் பந்துவீச்சில் கேட்ச் ஆகி 104 ரன்களில் வெளியேறினார் ரோஹித் ஷர்மா. அவர் ஆட்டமிழந்து வெளியேறிய போது இந்திய அணி 29.2 ஓவர்களில் 180 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து இரண்டு ஓவர்களிலேயே லோகேஷ் ராகுலும் 77 ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
பின்னர் வந்த விராட் கோலியை 28 ரன்களுக்கும் ஹர்திக் பாண்டியாவை ரன் ஏதும் எடுக்காத நிலையிலும் முஸ்தாபிசூர் ரஹ்மான் அவுட் ஆக்கினார். நான்காவது வீரராகக் களமிறங்கிய ரிஷப் பந்த் சிறுது நேரம் தாக்குப் பிடித்து விளையாடி 41 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். கடைசி நேரத்தில் மகேந்திர சிங் தோனியும் 35 ரன்களுக்கு ஆட்டமிழக்க இந்திய அணியின் ரன் வேகம் குறைந்தது. இந்திய அணி 350 ரன்களுக்கு மேல் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 314 ரன்கள் மட்டுமே எடுத்தது. வங்கதேச அணித் தரப்பில் சிறப்பாகப் பந்துவீசிய முஸ்தாபிசூர் ரஹ்மான் 5 விக்கெட் வீழ்த்தினார்.
இப்போட்டியில் சதம் கடந்த ரோஹித் ஷர்மா புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். உலகக் கோப்பை போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். ரிக்கி பாண்டிங் மற்றும் சவுரவ் கங்குலியுடன் ரோஹித் ஷர்மாவும் இரண்டாவது இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார். இவர்கள் அனைவரும் மொத்தம் 5 சதம் விளாசியுள்ளனர். முதல் இடத்தில் சச்சின் டெண்டுல்கர் (6 சதம்) இருக்கிறார்.
**
மேலும் படிக்க
**
**[பாமகவுக்கு ராஜ்யசபா: அதிமுக பதில்!](https://minnambalam.com/k/2019/07/02/24)**
**[டிஜிட்டல் திண்ணை: அமமுக தலைமை அலுவலகத்துக்கு ஆபத்து?](https://minnambalam.com/k/2019/07/01/61)**
**[திட்டமிட்டே திமுகவில் இணைந்தேன்: தங்க தமிழ்ச்செல்வன்](https://minnambalam.com/k/2019/07/01/53)**
**[சர்ச்சையைக் கிளப்பிய சசிரேகா](https://minnambalam.com/k/2019/07/02/14)**
**[தஞ்சை அமமுகவைக் குறிவைத்துக் களமிறங்கிய செந்தில்பாலாஜி](https://minnambalam.com/k/2019/06/30/17)**
�,”