ரியல் எஸ்டேட் துறையில் 100 நிறுவனங்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ.2.36 லட்ச கோடி உயர்ந்துள்ளதாக அறிக்கை ஒன்று கூறுகிறது.
*ஹூரன் இந்தியா* நிறுவனம் நூறு பணக்காரர்களை உள்ளடக்கிய ‘இந்தியா ரியல் எஸ்டேட் பணக்காரர்கள் 2018’ பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் ரியல் எஸ்டேட் துறையின் மொத்த சொத்து மதிப்பு 27 விழுக்காடு அதிகரித்துள்ளது. சென்ற வருடம் ரூ.1,86,700 கோடியாக இருந்த இத்துறையின் மதிப்பு இந்தாண்டு ரூ.2,36,610 கோடியாக வளர்ச்சியடைந்துள்ளது. லோதா குழுமத்தின் நிறுவனர் மங்கல் பிரபாத் லோதா ரூ.27,150 கோடி சொத்து மதிப்புடன் முதலிடத்தில் இருக்கிறார். 2017ஆம் ஆண்டு இவர் இரண்டாம் இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
எம்பஸி நிறுவனத்தின் ஜிதேந்திர விர்வானி ரூ.23,160 கோடியுடனும், டிஎல்எஃப் நிறுவனத்தின் ராஜீவ் சிங் ரூ.17,700 கோடியுடனும் அடுத்தடுத்த இடங்களில் முன்னிலை வகிக்கின்றனர். பெண் தொழிலதிபர்கள் வரிசையில் டிஎல்எஃப் நிறுவனத்தின் சர்வதேசப் பிரிவுத் தலைவர் ரேணுகா தல்வார் முதலிடம் பிடித்துள்ளார். இந்தப் பட்டியலில் இவருக்கு 19ஆவது இடம் கிடைத்திருக்கிறது. இவரைத் தவிர மேலும் எட்டு பெண்கள் பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். மேலும், மொத்த தொழிலதிபர்களில் 59 விழுக்காட்டினர் முதல் தலைமுறை தொழில்முனைவோர்தான் என இந்த அறிக்கை கூறுகிறது.
இதுகுறித்து ஹூரன் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அனாஸ் ரஹ்மான் கூறுகையில், “பட்டியலில் இடம்பெற்றுள்ள நூறு பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பானது, கிழக்கு மத்திய தரைக் கடல் பகுதியில் உள்ள சைப்ரஸ் நாட்டின் உள்நாட்டு உற்பத்தியை விட ரூ.7,200 கோடி அதிகமாகும்” எனத் தெரிவித்துள்ளார். ரியல் எஸ்டேட் துறையைச் சேர்ந்த பெரும் பணக்காரர்கள் குடியிருக்க விரும்பும் நகரங்களில், மும்பை முதலிடத்தில் உள்ளது. ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டோரில், 35 பேர் மும்பையைச் சேர்ந்தவர்கள். அடுத்து, டெல்லியில் 22 பேரும், பெங்களூருவில் 21 பேரும் வசிக்கின்றனர்.�,