மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே நிற்பது மிகவும் இக்கட்டான சூழல் என்று ரிசர்வ் வங்கியின் மத்தியக் குழு உறுப்பினரான எஸ்.குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.
மத்திய ரிசர்வ் வங்கியின் உயர்மட்டக் குழுக் கூட்டம் நவம்பர் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தின் ரிசர்வ் வங்கியின் தன்னாட்சியில் அரசின் தலையீடு மற்றும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது. சமீபத்தில் எழுந்த இப்பிரச்சினையால் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் உர்ஜித் படேல் பதவி விலக வாய்ப்பிருப்பதாகவும் செய்திகள் பரவின. இந்நிலையில் ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசுக்கு இடையே இந்த விவகாரத்தில் நிற்பதென்பது மிகவும் கடினமான சூழலாகும் என்று ரிசர்வ் வங்கியின் உயர்மட்டக் குழு உறுப்பினரான குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து *எகனாமிக் டைம்ஸ்* ஊடகத்துடனான நேர்காணல் ஒன்றில், “பணமதிப்பழிப்பு மற்றும் ஜிஎஸ்டியால் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறைக்கான கடனுதவி வங்கிகளிடமிருந்து முறையாகக் கிடைக்கவில்லை. அதன் பின்னர் வங்கி சீரமைப்புத் திட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு கடனுதவி எளிதாகக் கிடைக்கப் பெறுவதால் அத்துறை மீண்டு வருகிறது. வங்கி சீரமைப்புத் திட்டத்தின் கீழ் 11 பொதுத் துறை வங்கிகள் உள்ளன. இந்தியா போன்றதொரு வங்கி சார்ந்த பொருளாதார வளர்ச்சியைக் கொண்ட நாட்டில், வங்கிகளைக் கட்டுப்படுத்தினால் அது அந்நாட்டின் பொருளாதாரத்தையே கட்டுப்படுத்துவதாகும்” என்றார் குருமூர்த்தி.
இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை அதிகரித்து வருவதால் இறக்குமதியைக் கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.�,