ஜெயலலிதா மரணம் பற்றி விசாரிக்க தமிழக அரசால் அமைக்கப்பட்ட விசாரணை கமிஷனை ரத்து செய்யக் கோரி இன்று (அக்டோபர் 3) உயர்நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் விஜயன் முறையிட்டுள்ளார்.
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் அதுபற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்றும் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்தார். இந்நிலையில் திமுக, பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி சி.பி.ஐ . விசாரணை கோரின.
இந்நிலையில் இந்த பிரச்னையை எடப்பாடி அரசு அப்படியே கிடப்பில் போட்டது. கடந்த ஆகஸ்டு மாதம் எடப்பாடி அணியும், ஓ.பன்னீர் அணியும் இணைவதற்கான வேலைகள் நடந்தபோது பன்னீர் அணியின் கோரிக்கையை நிறைவேற்றுவதாகச் சொல்லி ஆகஸ்டு 17 ஆம் தேதி ஜெயலலிதா மரணத்துக்கு ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் ஏற்படுத்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அணிகள் இணைந்தன. ஆனால், ஒரு மாதம் கழித்து ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையராக நியமிக்கப்பட்டார்.
ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் இருந்தபோது டெல்லி எய்ம்ஸ் டாக்டர்கள், லண்டன் டாக்டர் பீலே உள்ளிட்ட மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர். மேலும் சிகிச்சையில் இருந்த ஜெயலலிதாவை தமிழக ஆளுனர் வித்யாசாகர் ராவ், மத்திய அமைச்சர்கள் அருண் ஜெட்லி, பாஜக தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல தலைவர்கள் வந்து சிகிச்சை பற்றி விசாரித்துச் சென்றனர்.
இவர்களைப் போன்ற தேசிய ஆளுமைகளை விசாரிக்க இந்த விசாரணை ஆணையம் அதிகாரம் வாய்ந்ததா என்று சர்ச்சை கிளம்பியது.
இதுபற்றி மூத்த வழக்கறிஞர் பாலு தொலைக்காட்சி விவாதங்களில் பேசியபோது, ‘இந்த விசாரணை ஆணையம் என்பது சட்ட அங்கீகாரம் அல்லாதது. இந்த ஆணையம் யாருக்கும் தன் முன் வந்து ஆஜராகி வாக்குமூலம் அளிக்குமாறு சம்மன் அனுப்ப முடியாது. அந்த அதிகாரம் இந்த ஆணையத்துக்குக் கிடையாது.
மேலும், இந்த ஆணையத்தால் அரசுக்கு பரிந்துரைகள்தான் வழங்க முடியும். அதை ஏற்பதா வேண்டாமா அல்லது கிடப்பில் போடுவதா என்பதை அரசுதான் முடிவு செய்யும். இந்த நிலையில் தமிழக அரசு அமைத்த விசாரணை கமிஷன் என்பது சட்ட ரீதியான அங்கீகாரம் பெற்ற அமைப்பல்ல’’ என்று தெரிவித்தார்.
இதுபோன்றே பல வழக்கறிஞர்களும் கருத்து தெரிவித்துள்ள நிலையில்தான்… மூத்த வழக்கறிஞரான கே.எம். விஜயன் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில், ’ஜெயலலிதா மரணம் தொடர்பாக தமிழக அரசு அமைத்த விசாரணை கமிஷனை ரத்து செய்ய வேண்டும்’ என்று முறையிட்டுள்ளார். இதை மனுவாக தாக்கல் செய்தால் விசாரிக்கலாம் என்று நீதிமன்றம் சார்பில் தெரிவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதேநேரம், ‘ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை கமிஷன் அமைத்ததில் விதிமீறல் நடந்திருக்கிறது’ என்று ஜோசப் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறார். இந்த வழக்கு நாளை (அக்டோபர் 4) விசாரணைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.�,