மே தினத்தைக் கொண்டாடும் தொழிலாளிகள் அனைவருக்கும் மே தின நல்வாழ்த்துகளை திமுக, அதிமுக (புரட்சித்தலைவி), திக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, பாமக, தேமுதிக, தமாக, புதிய நீதிக்கட்சி போன்ற பல்வேறு கட்சித்தலைவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
மு.க.ஸ்டாலின்: (திமுக)
சிகாகோ நகரில் மாபெரும் பேரணியை தொழிலாளர்கள் வீறுகொண்டு நடத்தி, தங்கள் இன்னுயிரைப் பலி கொடுத்துப் பெற்ற உரிமைகளை நினைவுகூரும் வகையில்தான் நாமெல்லாம் தொழிலாளர் வர்க்கத்தினருடன் இணைந்து மே 1ஆம் தேதியை இன்றைக்கு மே தினமாகக் கொண்டாடுகிறோம். தொழிலாளர்களின் தோழனாக எப்போதும் இருப்பவர் தலைவர் கலைஞர். அந்தத் தொழிலாளர்கள் வாழ்வு மேம்பட பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்தது திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி என்பதைப் பெருமையுடன் இந்த நேரத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன். தொழிலாளர்களுக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் இடையிலான உறவு இன்று ஏதோ எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருப்பதால் அல்ல – கழகம் ஆளுங்கட்சி வரிசையில் அமர்ந்திருந்தாலும் அவர்கள் கோரிக்கைக்காக குரல் எழுப்பும் முன்பே அந்தக் கோரிக்கைகள் பற்றிக் கனிவுடன் பரிசீலித்து நடவடிக்கை எடுத்து ‘தொழில் அமைதி’யைப் பாதுகாத்து வந்தவர் தலைவர் கலைஞர் என்பதால்தான் இந்த உறவு நீடித்த உறவாக நிலைத்த உறவாக இன்றும் தொடருகிறது.
கழக ஆட்சியில்தான் மே தினத்தன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை தினம் என்று அறிவிக்கப்பட்டது. தலைவர் கலைஞர் முதன்முதலில் முதலமைச்சரானபோதுதான் தொழிலாளர் நலனுக்காகத் தனியாக ஒரு அமைச்சகத்தைத் தோற்றுவித்தார்கள். கழக ஆட்சியில்தான் ‘நேப்பியர் பூங்கா’, மே தினப் பூங்கா என்று பெயர் சூட்டப்பட்டுத் திறந்து வைக்கப்பட்டு இன்றைக்கும் தொழிலாளர்களின் ஞாபகச் சின்னமாக மக்களுக்கு விளங்கிக் கொண்டிருக்கிறது. 20 சதவிகித போனஸும், ஊக்கத் தொகையும் அளித்தது மட்டுமின்றி, விவசாயத் தொழிலாளர் நல வாரியம் உள்ளிட்ட 31 அமைப்பு சாராத் தொழிலாளர் வாரியங்களை உருவாக்கி, தொழிலாளர்களுக்குப் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கியது கழக ஆட்சிதான்.
ஆகவே ஆளுங்கட்சியில் இருந்தால் கோரிக்கைகளை நிறைவேற்றுவதும், எதிர்க்கட்சி வரிசையில் இருந்தால் தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்காகக் கைகோத்து போராடுவதிலும் திராவிட முன்னேற்றக் கழகம் என்றைக்கும் முன்னணியில் நின்று இருக்கிறது. புதிய தொழிலாளர் சட்டம், உலகமயமாக்கல் என்று எந்தக் காலகட்டத்திலும் தொழிலாளர்களுக்குப் பிரச்னைகள் எழும்போது இனிமேலும் முதல் படைத் தளபதியாக நின்று தொழிலாளர்களின் உரிமைகளுக்காகத் திராவிட முன்னேற்றக் கழகம் போராடும் என்பதை இந்த மே தினத்தன்று தெரிவித்து, தொழிலாளர்களின் வாழ்வில் நிம்மதி பிறக்க, அவர்களின் இல்லங்களில் எல்லாம் இன்பம் பூத்துக் குலுங்க வேண்டும் என்று தொழிலாளர்களுக்கு எனது சார்பிலும், தலைவர் கலைஞர் அவர்கள் சார்பிலும் மே தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: (அதிமுக புரட்சித்தலைவி)
உழைக்கும் மக்களின் சிறப்பினை அகில உலகுக்கும் எடுத்துக்காட்டும் நாளாக ‘மே தினம்’கொண்டாடப்படுகிறது. ஜெயலலிதாவின் புனிதப் பாதையில் தொழிலாளர் வர்க்கத்தைச் சார்ந்த மக்கள், தங்களது வாழ்வில் அனைத்து வளங்களையும், நலங்களையும் பெற்று வாழ வேண்டும்.
கி.வீரமணி: (திக)
தொழிலாளிகளைப் பங்காளிகளாக்கிப் பார்க்கும் பெருத்த மாற்றத்தை நோக்கி இவ்வையம் நடக்கட்டும்.
ஏ.நாராயணன்:
உழைப்பவர்களால்தான் இந்த உலகம் உருவாகிறது. உழைப்பவர் உயர்ந்தால்தான் உலகம் உயரும் என்று உழைப்பாளிகளின் பெருமையை உணர்த்தும் உன்னத நாள் மே தினம்.
திருநாவுக்கரசர்: (காங்கிரஸ்)
உலகத்தில் உள்ள தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராடி வெற்றிகண்ட நாளாக மே 1 கொண்டாடப்பட்டு வருகிறது. மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு தொழிலாளர்களுக்கு விரோதமான சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இதை எதிர்த்து தொழிலாளர்கள் அனைவரும் பாஜக அரசுக்கு எதிராக ஓரணியில் திரண்டு போராடுவது அவசியமாகும்.
முத்தரசன்: (இந்திய கம்யூனிஸ்ட்)
இவ்வாண்டு மே தின விழா, ஏகாதிபத்திய உலகமயமாக்கலுக்கு எதிராக, மதவாத, சாதியவாத சக்திகளுக்கு எதிராக உழைக்கும் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஓரணியில் திரண்டு அணி வகுக்கவும், பரந்துபட்ட ஜனநாயக மதச் சார்பற்ற அணி அமைக்கவும் போராடவும் முன்வர வேண்டுகிறோம்.
வைகோ: (மதிமுக)
மனித குலம் இயங்குவதற்கும் வாழ்வதற்கும் அடிப்படை உழைக்கும் மக்களின் கரங்கள்தாம். தானியங்களை, காய்கறிகளை விளைவித்து உணவாக்கித் தந்து உயிர்களை வாழச் செய்வது உழைப்பாளர்களின் வியர்வைத் துளிகள்தான். இவர்களுக்கு மே தின வாழ்த்துகளைத் தெரிவித்து கொள்கிறேன்.
ராமதாஸ்: (பாமக)
உழைப்பாளர் நாளின் வரலாறு மிகவும் நீண்டதாகும். காலவரையறையின்றி அடிமைகளைப் போல வேலை வாங்கப்படுவதைக் கண்டித்து உலகின் பல்வேறு நாடுகளில் பல நூற்றாண்டுகளாகத் தொழிலாளர்கள் நடத்திய போராட்டம் 1889ஆம் ஆண்டில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து மே 1ஆம் தேதி உழைப்பாளர்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
விஜயகாந்த்: (தேமுதிக)
உழைக்கும் தொழிலாளர்களின் உழைப்பை மதித்து அவர்கள் வாழ்வில் ஒளிமயமான வாழ்க்கை உதயமாக வேண்டும் என்று மே தின வாழ்த்துகளைத் தெரிவித்து கொள்கிறேன்.
ஜி.கே.வாசன்: (தமாகா)
உலக தொழிலாளர் தினம் மே 1ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு மனிதனும் இந்நாளை, தன் நலன் காக்கும் நாளாகக் கருத வேண்டும்.
ஏ.சி.சண்முகம்: (புதிய நீதிக்கட்சி)
தொழிலாளர்கள் நலமாக இருந்தால்தான் தொழில் வளரும், தொழில்கள் வளர்ந்தால் முதலாளிகள் வளர்வார்கள். இரவு, பகல் என்று பாராமல் மழை, வெயில் என்று நினைக்காமல் உழைப்பவர்கள் தொழிலாளர்கள்.
என்.ஆர்.தனபாலன்: (பெருந்தலைவர் மக்கள் கட்சி)
மே 1ஆம் தேதி தொழிலாளர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. ஆங்கிலேயர்கள் நம்மை ஆட்சி செய்த காலத்தில் இந்தியாவின் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக அம்பேத்கர் பதவி வகித்தபோது தொழிலாளர்களின் நலனுக்காகத் தனியாக சட்டங்கள் இயற்றினார். அரசுத்துறை தொழிலாளர்கள் மட்டுமே பாதுகாக்கப்படுகின்றனர். அனைத்துத் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் ஏற்றம் பெற வேண்டும்.
மக்கள் தேசிய கட்சி நிறுவனத்தலைவர் சேம.நாராயணன், கொங்கு நாடு ஜனநாயகக் கட்சி தலைவர் ஜி.கே.நாகராஜ் மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ஆகியோரும் மே தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.�,