பாலியல் புகாரில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் அக்பர் பாட்டியலா நீதிமன்றத்தில் இன்று ஆஜராகி விளக்கமளித்தார்.
மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சராக இருந்த எம்.ஜே.அக்பர் மீது 12க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் புகாரை தெரிவித்துள்ளனர். தன் மீதான புகார்கள் தவறானவை, திரிக்கப்பட்டவை என்று விளக்கமளித்த அக்பர், முதன்முதலில் தன்மீது புகார் கூறிய பத்திரிகையாளர் பிரியா ரமணி மீது மான நஷ்ட வழக்கும் தொடுத்தார். பாலியல் புகாரையடுத்து தனது பதவியையும் ராஜினாமா செய்தார். தனது மத்திய இணையமைச்சர் பதவியையும் அவர் ராஜினாமா செய்தார்.
பிரியா ரமணி மீது அவர் தொடர்ந்த மனு கடந்த அக்டோபர் 18ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுகொள்வதாக தெரிவித்த நீதிபதி சமர் விஷால். வழக்கை இன்றைய தேதிக்கு (அக்டோபர் 31) ஒத்தி வைத்தார். அக்பர் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி பட்டியாலா நீதிமன்றத்தில் அக்பர் இன்று ஆஜராகியிருந்தார். அப்போது, “தனது ட்விட்டின் தொடக்க வாக்கியமாக ஒழுங்கின்மை குறித்து பிரியா ரமணி கூறியுள்ளார். வோக் இதழில் 2017ஆம் ஆண்டு கட்டுரை வெளியிடப்படும்போது என் பெயர் குறிப்பிடப்படவில்லை. நான் எதுவும் செய்யவில்லை என்றும் அவர் அக்டோபர் 8ஆம் தேதி பதிவிட்ட ட்விட்டில் கூறியுள்ளார்” என தெரிவித்த அக்பர், இந்த குற்றச்சாட்டுகளால் தனது புகழுக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். தன் மீதான குற்றச்சாட்டு ஜோடிக்கப்பட்ட ஒன்று எனவும் அவர் தெரிவித்தார்.
அவரது வாக்குமூலங்களைப் பதிவு செய்துகொண்ட நீதிமன்றம் வழக்கு விசாரணையை நவம்பர் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.�,