புற்றுநோய் சிகிச்சை குறித்த தேசிய கருத்தரங்கு மதுரை அரசு மருத்துவமனையில் நேற்று (மார்ச் 2) தொடங்கியது. இந்திய புற்றுநோய் அறுவைச் சிகிச்சை சங்கத்தின் சார்பில் இந்தத் தேசிய கருத்தரங்கு மூன்று நாட்கள் நடைபெறுகிறது.
மதுரை அரசு மருத்துவமனையில் நடைபெற்ற முதல் நாள் கருத்தரங்கில், மார்பக, கர்ப்பப்பை உள்ளிட்ட புற்றுநோய்களுக்கு நவீன கருவிகள் மூலம் அறுவைச் சிகிச்சை செய்வது குறித்து ஹைதராபாத் மற்றும் சென்னையைச் சேர்ந்த சிறந்த புற்றுநோய் சிகிச்சை நிபுணர்கள் விளக்கம் அளித்தனர்.
இரண்டாவது நாளான இன்றும் (மார்ச் 3), நாளையும் மதுரை பாண்டிகோவில் சாலையில் உள்ள பப்பீஸ் ஓட்டலில் புற்றுநோய் குறித்த மாநாடு நடைபெறுகிறது. இந்தத் தேசிய கருத்தரங்கில் இந்தியா முழுவதும் இருந்து புற்றுநோய் அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் பங்கேற்கிறார்கள்.
இந்தக் கருத்தரங்கில் பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய் மற்றும் லேப்ராஸ்கோப்பி சிகிச்சை முறையில் புற்றுநோய்க் கட்டியை அகற்றுவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும், நுண்துளை அறுவைச் சிகிச்சை உட்பட 6 விதமான புற்றுநோய் அறுவைச் சிகிச்சை குறித்து எல்.சி.டி., மூலம் நேரடி விளக்கம் அளிக்கப்பட்டது. இந்தக் கருத்தரங்கில், அறுவைச் சிகிச்சை முதுநிலை பட்ட மேற்படிப்பு மாணவர்கள் ஆராய்ச்சிக் கட்டுரைகளைச் சமர்ப்பிக்கின்றனர்.
கடந்த வருடம் டெல்லியில் 3 நாள் தேசிய கருத்தரங்கு நடைபெற்றபோது, மார்பகத்தில் ஏற்படும் புற்றுநோய்க் கட்டிகளை ஆரம்ப நிலையில் கண்டுபிடித்து, ‘லம்பக்டோமி’ சிகிச்சை மூலம் அகற்றினால், மார்பக அறுவை சிகிச்சையைத் தவிர்க்கலாம் என மருத்துவ நிபுணர்கள் கூறியது குறிப்பிடத்தக்கது.�,