உத்தராகண்ட், டெல்லி, பஞ்சாப் உட்பட ஆறு வடஇந்திய மாநிலங்களுக்கான போதைப் பொருள் ஒழிப்பு தூதுவராக சஞ்சய் தத் நியமிக்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல பாலிவுட் நடிகரான சஞ்சய் தத், நடிகர் மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவரான மறைந்த சுனில் தத்தின் மகன் ஆவார். 1993ஆம் ஆண்டு தனது வீட்டில் எந்திரத் துப்பாக்கியை மறைத்து வைத்திருந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு, அந்த வழக்கில் இவர் சிறைத் தண்டனையும் அனுபவித்தவர். இவரது வாழ்க்கை சரிதம் ‘சஞ்சு’ என்ற பெயரில் சமீபத்தில் வெளியாகிப் பெருவெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
சஞ்சய் தத், தனது இளமைப் பருவத்தில் போதைப் பொருளுக்கு அடிமையானவர். இதற்காக, போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு மையத்தில் பயிற்சி பெற்றவர். அதிலிருந்து வெற்றிகரமாக மீண்டெழுந்தவர். தற்போது, இவர் படத் தயாரிப்பிலும் நடிப்பிலும் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், இவர் உத்தராகண்ட் மாநிலத்துக்கான போதைப் பொருள் ஒழிப்பு தூதுவராக நியமிக்கப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக, அம்மாநில முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத் சஞ்சய் தத்துடன் தொலைப்பேசியில் நேற்று பேசியதாகவும் கூறப்படுகிறது.
உத்தராகண்ட் மட்டுமல்லாமல் டெல்லி, பஞ்சாப், ஹரியானா, இமாசலப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய வடஇந்திய மாநிலங்களுக்கான போதைப் பொருள் ஒழிப்பு தூதுவராகவும் இவர் நியமிக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது. போதைப் பொருட்களுக்கு எதிரான பிரச்சாரத்தில் இவர் ஈடுபடுவார் என்றும், இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
�,