ந.வினோத் குமார்
‘திரை கடல் ஓடி திரவியம் தேடு’ என்றார்கள். ஆனால் கடலோ, மனிதர்களைக் கொன்று புதைக்கும் திராவகமாகிறது. நினைவில் அழுந்தப் பதிந்த உதாரணம், ஆலன் குர்தி. மிகச் சமீபத்திய ரணம், ஆஸ்கர் ஆல்பர்ட்டோ மார்டினேவும் அவரது மகள் ஆஞ்சி வலேரியாவும்.
உலகில் இன்று மிக முக்கியமான பிரச்சினைகள் இரண்டுதான். ஒன்று, பருவநிலை மாற்றம். இன்னொன்று, அதனால் ஏற்படும் இடப்பெயர்வு.
மனிதன் தவிர்த்து மற்ற உயிரினங்கள் அனைத்தும் ஆண்டின் சில மாதங்கள் அவற்றின் வாழிடங்களிலிருந்து இன்னொரு இடத்துக்கு நகரும். இந்த நகர்வு உணவுக்காகவோ அல்லது இனப் பெருக்கத்துக்காகவோ இருக்கலாம். இந்த இடப்பெயர்வை நாம் ‘வலசை’ என்கிறோம்.
உயிரினங்கள் வலசை செல்வது அடிப்படைத் தேவை. ஆனால், மனிதன் மேற்கொள்கிற இடப்பெயர்வு பெரும்பாலும் ஆடம்பர வசதிகளுக்கானதாக உள்ளது. அத்தியாவசியத் தேவைகளுக்காக இல்லாமல் இப்படி வசதிகளைத் தேடி மனிதர்கள் நகர்ந்தபோதுதான் சுற்றுச்சூழலில் மிகப் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்தன.
அறிவியல் வளர்ந்தது. இயந்திரங்கள் வந்தன. போக்குவரத்து வசதிகள் பெருகின. தாங்கள் இருக்கும் இடத்தின் தட்ப வெப்பத்தை மாற்ற மனிதர்களால் முடிந்தது. இவை ஒருபக்கம் வாழ்க்கையைச் சுலபமாக்கினாலும் இன்னொருபக்கம் மனித இனத்தின் இருப்பை சிக்கலுக்கு உள்ளாக்கின.
நீர் செல்லும் தடங்கள் மாறின. காற்றில் நச்சு வாயுக்கள் புலப்பட்டன. மண் தன் வீரியத்தை இழக்கத் தொடங்கியது. வியாதிகள் எல்லா திசையிலும் வியாபித்தன.
இந்தச் சிக்கலை மனிதர்கள் உணரத் தொடங்கும் முன் ஆண்டுகள் பல கடந்துவிட்டிருந்தன. உலகம் வெப்பமயமாகிறது. பனிப்பாறைகள் உருகுகின்றன. கடல் மட்டம் உயர்கிறது.
**சொல்லாடலும் செயற்பாடுகளும்**
மனிதர்கள் சுதாரித்தார்களா? ஓரளவு. தொண்ணூறுகளின் இறுதி வரையில் ‘பருவநிலை’ என்ற சொல்லாடல் தூர்தர்ஷன் சேனலின் இரவு செய்திகளில் வானிலை அறிக்கை வாசிக்கப்படும்போது மட்டும் புழங்கியது. ஆனால், சுனாமிக்குப் பிறகு இந்தச் சொல் கடந்த 15 ஆண்டுகளில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் மிகவும் விஸ்தீரணமானது.
பருவநிலை மாற்றம் குறித்து ஆய்வுகள் நடைபெறுகின்றன. அது குறித்த படிப்புகள் பல்கலைக்கழகங்கள் பலவற்றில் பாடமாக வைக்கப்பட்டுள்ளன. அரசியல், பொருளாதாரப் புலங்களில் இது முக்கியமான கருதுகோளாக உள்ளது. பருவநிலை மாறி வருகிறது என்பதை அங்கீகரியுங்கள் என்று போராட்டங்கள் நடைபெறுகின்றன. திரைப்படங்கள் வருகின்றன. டிகாப்ரியோ போன்ற ஹாலிவுட் நடிகர்கள் குரல் கொடுக்கிறார்கள்.
அப்படிப்பட்ட முக்கியமான, உலகில் உள்ள பிரச்சினைகளில் முதன்மையான சூழலியல் பிரச்சினை ஒன்று புனைவு இலக்கியங்களில் முக்கிய இடம்பிடித்துள்ளதா என்றால் ‘இல்லை’ என்பதே பதில்!
பத்திரிகைகளில் கட்டுரையாக எழுதப்படும் அபுனைவு வடிவத்திலேதான் இதுகாறும் பருவநிலை மாற்றப் பிரச்சினை அதிகம் பேசப்பட்டுவந்துள்ளது. பருவநிலை மாற்றம் மட்டுமல்ல; இன்றுள்ள வேறு பல சூழலியல் பிரச்சினைகளும் பேசப்படவே இல்லை.
இந்தச் சூழல் பிரச்சினை மொழி கடந்தது. அதனால்தானோ என்னவோ ஆங்கிலம் தவிர வேறு எந்த மொழிகளிலும் பருவநிலை மாற்றத்தை மையமாகக் கொண்ட புனைவிலக்கியங்கள் அதிக அளவில் வருவதே இல்லை.
ஆங்கிலத்தில் அவ்வாறு வெளியாகும் புனைவு இலக்கியங்களில், மிகவும் கவனிக்கத்தக்கவை அமிதவ் கோஷ் தந்த படைப்புகள். ‘சுற்றுச்சூழல் பிரச்சினைகளை புனைவு இலக்கியங்கள் பேச வேண்டும்’ என்று கடந்த சில ஆண்டுகளாகப் பேசி வருகிறார் அவர். அதுகுறித்து ‘தி கிரேட் டிரேஞ்ச்மென்ட்’ (2016) எனும் தனது அபுனைவு நூலில் விரிவாகப் பதிவு செய்திருக்கிறார்.
எனினும் அதற்கு முன்பே 2004இல் ‘தி ஹங்ரி டைட்’ என்னும் தனது நாவலில் பருவநிலை மாற்றம், சுனாமி போன்ற விஷயங்களைப் பதிவு செய்திருக்கிறார். இந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியான ‘கன் ஐலாண்ட்’ எனும் அவரது புதிய நாவலும் பருவநிலை மாற்றம் மற்றும் அதனுடன் தொடர்புள்ள இன்னொரு பிரச்சினையான ‘புலம்பெயர்தல்’ குறித்தும் பேசுகிறது.
அமெரிக்காவின் ப்ரூக்ளின் நகரத்தில் அரிதான புத்தகங்களை வாங்கி விற்கும் டீலர் தீனநாத் தத்தா. அவன் சொந்த ஊரான கொல்கத்தாவுக்கு அவ்வப்போது வந்து செல்வான். அப்படி ஒரு முறை வரும் போது வயதான அவனது உறவுக்காரப் பெண்மணி சுந்தரவனத்தில் உள்ள மானஸா தேவி கோயிலுக்கு ஒருமுறை போய் வரச் சொல்கிறாள். அங்கு அவனுக்கு வித்தியாசமான அனுபவங்கள் கிடைக்கின்றன. அந்த அனுபவம் அவனை இத்தாலியின் வெனிஸ் நகரத்துக்கு அழைத்துச் செல்கின்றன. ஏன் எதற்கு எப்படி என்பதெல்லாம் நாவலில்..!
‘கன் ஐலாண்ட்’ நாவலை, ‘தி ஹங்ரி டைட்’ நாவலின் தொடர்ச்சி என்றுகூடச் சொல்லலாம். முந்தைய நாவலில் வந்த சுந்தரவனம் இங்கும் வருகிறது. போன் பீபி எனும் தொன்மக் கதை போல இதில் மானஸா தேவி கோயில் கதை. இராவதி ஓங்கில்களை ஆய்வு செய்த முந்தைய நாவலின் நாயகி பியா, இதிலும் வருகிறாள்.
நாவல் முழுக்க அறிவியல், வரலாறு, மானுடவியல் எனப் பரந்துபட்ட புலங்களிலிருந்து தகவல்களை எடுத்தாளுகிறார் அமிதவ். அவரது சிறப்பே அதுதான்.
**மனிதர்களை அகதிகளாக்கிய கடல்**
நாவலில் அமிதவ் இரண்டு விஷயங்களை முதன்மைப்படுத்துகிறார். ஒன்று, உயரும் கடல் மட்டம். இரண்டு, புலம்பெயரும் அகதிகளின் போராட்ட வாழ்வு.
கடலோர நாடுகள், தீவுகள் எல்லாம் கடல் மட்ட உயர்வால் தங்களது நிலப் பகுதிகளை இழந்து வருகின்றன. அதனால் அங்குள்ள மக்கள் வேறு மேடான இடங்கள், தேசங்கள் ஆகியவற்றை நோக்கி நகர்கிறார்கள். ஆனால், சர்வதேச அரசியல் கட்டுப்பாடுகளால் அந்த நகர்தல் கடலிலேயே பெரும்பாலும் முடிந்துவிடுகிறது. வாழ்தலின் மீதான அவர்களது ஆசை கரை காண்பதில்லை.
அப்படியான கடல் மட்ட உயர்வால்தான் மானஸா தேவி கோயிலும் சிதிலமடைந்தது. சுனாமியைத் தடுத்த அலையாத்திக் காடுகள் நிறைந்த சுந்தரவனம் கொஞ்சம் கொஞ்சமாக மூழ்கி வருகிறது. வங்கதேசத்தில் உள்ள பெருமளவு கடலோர நிலங்கள் மூழ்கிவிட்டதுகூட, சட்டத்துக்குப் புறம்பாக எந்த ஆவணமுமின்றி தமிழகத்துக்கு வந்த வங்கதேசத்தினர் கைது செய்யப்படுவதற்குக் காரணமாக இருக்கலாம்.
இது போரால் மட்டும் அகதியாகும் காலம் அல்ல. சூழலியல் பிரச்சினைகளாலும் அகதியாகிற காலம். எனவேதான் ‘என்விரான்மென்ட்டல் ரெஃப்யூஜிஸ்’ (சூழலியல் அகதிகள்) என்ற பதமே ஆங்கிலத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது. அந்தப் பதத்துக்கு வலுவேற்றும் விதமாக அமைகிறது இந்நூல்.
பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள விஞ்ஞானிகள் இரண்டு தீர்வுகளை முன் வைக்கிறார்கள். ஒன்று, ‘மிட்டிகேஷன்’. அதாவது, உலகம் மேலும் வெப்பமயமாவதைக் குறைப்பது. இரண்டு, ‘அடாப்டேஷன்’. அதாவது, அந்த வெப்பமயமாதலுக்கு நம்மைத் தகவமைத்துக்கொள்வது.
உலகம் இரண்டாவது தீர்வை நோக்கித்தான் ஓடுகிறது. அது பேரழிவின் திசை என்பதை நாம் உணர்வதற்குள் வெகுதூரம் கடந்திருப்போம்..!
(கட்டுரையாளர் **ந.வினோத் குமார்** சூழலியல் எழுத்தாளர். தொடர்புக்கு: ijournalistvinoth@gmail.com)
**
மேலும் படிக்க
**
**[டிஜிட்டல் திண்ணை: உதயநிதியை மாசெக்கள் தேடி வரவேண்டும்- அறிவாலயத்தின் மெசேஜ் !](https://minnambalam.com/k/2019/07/15/72)**
**[அதிமுக தலைவராகிறாரா ரஜினி?](https://minnambalam.com/k/2019/07/15/18)**
**[திமுகவில் இணைந்த தேமுதிக மா.செ!](https://minnambalam.com/k/2019/07/14/48)**
**[அவசரப்பட்டுவிட்டேனோ? புலம்பிய தங்கம்](https://minnambalam.com/k/2019/07/13/18)**
**[ நியூசிலாந்துக்கு ‘விதி’ செய்த ‘சதி’!](https://minnambalam.com/k/2019/07/15/46)**
�,”